ஓராண்டுக்கு மேலாகியும் பி.எட். பட்டச் சான்றிதழ் வழங்கப்படவில்லை: அரசுக்கு அன்புமணி கண்டனம்

சென்னை: ஓராண்டுக்கு மேலாகியும் பி.எட். பட்டச் சான்றிதழ் வழங்கப்படவில்லை என்றும் 60 ஆயிரம் பட்டதாரிகளின் எதிர்காலத்துடன் திமுக அரசு விளையாடுவதா? என்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் உள்ள 642 அரசு மற்றும் தனியார் கல்வியியல் கல்லூரிகளில் கடந்த ஆண்டு இளநிலை கல்வியியல் ( பி.எட்) பட்டம் பெற்ற 60 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு ஓராண்டுக்கு மேலாகியும் தற்காலிகப் பட்டச்சான்றிழும், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும் வழங்கப்படவில்லை. இதனால் அவர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டிருக்கிறது. பட்டதாரிகளின் எதிர்காலம் தொடர்பான விவகாரத்தில் தமிழக அரசும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும் பொறுப்பின்றி செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

பல்கலைக்கழக மானியக்குழு விதிகளின்படி, எந்த ஒரு தேர்வாக இருந்தாலும் அதன் முடிவுகள் வெளியான நாளில் இருந்து 180 நாட்களுக்குள் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ், பட்டச் சான்று உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களும் வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த ஆண்டு மே மாதம் நடத்தப்பட்டு, அடுத்த சில வாரங்களில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பி.எட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு ஓராண்டுக்கு மேலாகியும் இன்று வரை எந்த சான்றிதழும் வழங்கப்படவில்லை. அதனால், பி.எட் பட்டம் பெற்று ஓராண்டுக்கு மேலாகியும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டதாரிகளால் எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை.

தமிழக அரசு பள்ளிகளில் 1996 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிப்பதற்கான ஆள்தேர்வு அறிவிக்கையை கடந்த 10-ம் தேதி தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. அந்தப் பணிக்கு விண்ணப்பிக்கவும், சான்றிதழ்களின் நகல்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்யவும் ஆகஸ்ட் 12-ஆம் நாள் கடைசி நாளாகும்.

ஆனால், அதற்குள்ளாக புதிய பி.எட். பட்டதாரிகளுக்கு தற்காலிக பட்டச் சான்றுகளும், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழும் கிடைக்க வாய்ப்பில்லை. அதனால், கடந்த ஆண்டில் பி.எட். தேர்ச்சி பெற்ற 60 ஆயிரம் பேரில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியில் சேர்வதற்கு தகுதி பெற்ற 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அப்பணிக்கு விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர், பதிவாளர், தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர் உள்ளிட்ட பதவிகள் கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேலாக காலியாக கிடப்பது தான் அனைத்துக் குழப்பங்களுக்கும் காரணம் ஆகும். துணைவேந்தர் உள்ளிட்ட பதவிகளில் பொறுப்பு அதிகாரிகளாக பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டிருக்கும் போதிலும், அவர்களுக்கு எந்த அதிகாரமும் இல்லாததால் இதுவரை சான்றிதழ்களை வழங்க முடியவில்லை. இந்த சிக்கலுக்கு தீர்வு காண வேண்டிய தமிழக அரசு அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் நியமிக்கப்படவில்லை. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் மட்டும் தான் அவ்வப்போது குறைந்த எண்ணிக்கையில் நியமிக்கப்பட்டு வருகின்றனர். உரிய காலத்தில் தற்காலிகப் பட்டச் சான்றிதழ்களையும், ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்களையும் வழங்காததன் மூலம் அந்த பணிக்கான போட்டித் தேர்வுகளிலும் பி.எட் பட்டதாரிகளை பங்கேற்க விடாமல் தடுக்கிறது திமுக அரசு. 60 ஆயிரம் பட்டதாரிகளின் எதிர்காலத்துடன் திமுக அரசு விளையாடுவதா? அவர்களின் வாழ்க்கையுடன் திமுக அரசு விளையாடுவதை அனுமதிக்க முடியாது.

அரிதிலும் அரிதாக நடத்தப்படும் ஆசிரியர் பணிக்கான தேர்வுகளில் பங்கேற்க புதிய பி.எட் பட்டதாரிகள் அனுமதிக்கப்பட வேண்டும். அதற்கு வசதியாக அடுத்த இரு வாரங்களில் புதிய பி.எட் பட்டதாரிகளுக்கு தற்காலிகப் பட்டச்சான்றிழும், ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியலும் வழங்கப்படுவதை தமிழக அரசும், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகமும் உறுதி செய்ய வேண்டும்.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.