பெங்களூரு: முதல்வர் சித்தராமையா தலைமையில், கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு 2 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்நிலையில், துணை முதல்வர் டி.கே.சிவகுமாரின் ஆதரவாளர்கள் முதல்வர் பதவி கேட்டு போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதனால் டி.கே.சிவகுமார், சித்தராமையா இடையே பனிப்போர் நீடிக்கிறது.
இந்நிலையில் இருவரும் கடந்த 7-ம் தேதி டெல்லிக்கு சென்றனர். அப்போது காங்கிரஸ் மூத்த தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை தனித்தனியாக சந்திக்க அனுமதி கோரினர். ஆனால் ராகுல் காந்தி சந்திக்க நேரம் ஒதுக்கவில்லை. இதனால் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்துவிட்டு பெங்களூரு திரும்பினர்.
இந்நிலையில் நேற்று மீண்டும் சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் டெல்லிக்கு சென்றனர். இருவரும் ராகுல் காந்தியை சந்திக்க நேரம் கேட்டும், அவர் நேரம் ஒதுக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் இருவரும் காங்கிரஸ் பொதுச்செயலாளர் ரன்தீப் சுர்ஜேவாலாவை சந்தித்து பேசினர்.
சித்தராமையா, டி.கே.சிவகுமார் இருவரையும் ராகுல் சந்திக்க மறுத்த விவகாரம் காங்கிரஸ் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர்களிடம் விசாரித்த போது, ‘‘சித்தராமையாவும், டி.கே.சிவகுமாரும் முதல்வர் பதவிக்காக மோதிக்கொள்வது காங்கிரஸ் ஆட்சிக்கு மக்களிடையே அவப்பெயரை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ராகுல் அதிருப்தி அடைந்துள்ளார். எனவே இருவரையும் சந்திக்க நேரம் ஒதுக்க மறுத்துவிட்டார்” என தெரிவித்தனர்.