மும்பை: மராத்திய ஆட்சியாளர்களால் உருவாக்கப்பட்ட கோட்டைகள் மற்றும் ராணுவ தளங்கள், தமிழகத்தின் செஞ்சி கோட்டை ஆகியன ஐ.நாவின் யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதன்மூலம், இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
அமித்ஷா புகழாரம்: இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கையுடன் தொடர்புடைய 12 கோட்டைகளை யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் சேர்த்துள்ளது. இது அனைத்து நாட்டு மக்களுக்கும் மிகுந்த பெருமையைத் தரும் தருணம்.
சில நாட்களுக்கு முன்பு, நான் ராய்காட் கோட்டைக்குச் சென்றேன், சத்ரபதி சிவாஜி மகாராஜின் வாழ்க்கையுடன் தொடர்புடைய அந்த சின்னங்களில் ஆன்மிக அனுபவத்தைப் பெற்றேன். இந்தக் கோட்டைகள் இந்து சுயாட்சியைப் பாதுகாப்பதற்கான முக்கிய தூண்களாக இருந்து வருகின்றன. இங்கிருந்து, கோடிக்கணக்கான நாட்டு மக்கள் தங்கள் தாய்மொழி மற்றும் கலாச்சாரத்தின் மீது தொடர்ந்து உத்வேகம் பெற்று வருகின்றனர்” என்று தெரிவித்துள்ளார்
44 ஆக உயர்வு: மராத்தா ராணுவ தளங்கள் யுனெஸ்கோ பட்டியலில் இடம்பெற்றதன் மூலமாக, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட யுனெஸ்கோ பாரம்பரிய சின்னங்களின் எண்ணிக்கை 44 ஆக உயர்ந்துள்ளது.
இதுகுறித்து யுனெஸ்கோ அமைப்பு வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய சின்னங்கள் பட்டியலில் இந்தியாவின் மராத்திய ஆட்சியாளர்களின் ராணுவ தளங்கள் இடம்பெற்றுள்ளது’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரிஸில் நடைபெற்று வரும் உலக பாரம்பரியக் குழுவின் (WHC) 47வது அமர்வில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
இந்தியாவிலிருந்து யுனெஸ்கோ பாரம்பரிய சின்னத்துக்கான 2024-25 ம் ஆண்டுக்கான பரிந்துரையில் ‘மராத்திய ராணுவ தளங்கள்’ இடம்பெற்றது. மராத்திய ராணுவ தளங்களில், மகாராஷ்டிராவில் உள்ள சல்ஹெர் கோட்டை, சிவனேரி கோட்டை, லோஹ்காட், கண்டேரி கோட்டை, ராய்காட், ராஜ்காட், பிரதாப்காட், சுவர்ணதுர்க், பன்ஹாலா கோட்டை, விஜய் துர்க் மற்றும் சிந்துதுர்க் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள செஞ்சி கோட்டை ஆகியவை இடம்பெற்றுள்ளன. இந்த ‘மாராத்திய ராணுவ கோட்டைகள் மற்றும் தளங்கள் ‘ 17 மற்றும் 19 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடைபட்ட காலத்தில் உருவாக்கப்பட்டன.