"ஜெயலலிதா எனக்கு ஃப்ரண்ட்; அடிக்கடி வரவழைத்து பேசுவாங்க! – சரோஜா தேவியின் ப்ளாஸ்பேக் பேட்டி

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல்வேறு மொழிப் படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் சரோஜா தேவி.

கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், வாழ்நாள் சாதனையாளர் போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார்.

எம்.ஜி.ஆருடன் 26 படங்களிலும், சிவாஜி கணேஷனுடன் 22 படங்களிலும் நடித்திருக்கிறார். 

சரோஜா தேவி
சரோஜா தேவி

1960- 70 காலக்கட்டங்களில் முன்னணி நடிகையாகத் திகழ்ந்த இவர்  உடல்நலக் குறைவால் இன்று இயற்கை எய்தியிருக்கிறார்.

அவரின் மறைவிற்கு அரசியல் தலைவர்கள், திரைப்பிரபலங்கள் உள்ளிட்ட பலர் இரங்கலைத் தெரிவித்து வருகின்றனர்.

சரோஜா தேவி அவர்களின் மறைவையொட்டி விகடனிற்கு அவர் அளித்த பழைய பேட்டி ஒன்றின் ரீவைண்ட் இங்கே…

“எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி என முன்னணி ஹீரோக்களின் நாயகியாக நடித்தவர் நீங்கள். இந்த மூன்று பேரில் உங்களுக்கு பெஸ்ட் ஜோடி என்று யாரைச் சொல்வீர்கள்… மூன்று பேரிடமும் உங்களுக்குப் பிடித்த விஷயங்கள் என்னென்ன?’’

“எல்லா முன்னணி ஹீரோக்களோடும் நான் நடிச்சிருந்தாலும் எம்.ஜி.ஆர் கூடத்தான் அதிக படங்களில் நடிச்சிருக்கேன். நான் கன்னடப் படங்களில்தான் நடிச்சுக்கிட்டிருந்தேன். எம்.ஜி.ஆர்தான் ‘நாடோடி மன்னன்’ படம் மூலமா என்னை தமிழுக்கு அறிமுகப்படுத்தினார். என் திறமைமீது அவருக்கு ரொம்ப நம்பிக்கை. எல்லா படமும் ஹிட் அடித்தது, அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்தன. எம்.ஜி.ஆரோட 26 படங்கள் நடிச்சிருக்கேன். அப்போ எம்.ஜி.ஆர்தானே எனக்கு பெஸ்ட் ஜோடியாக இருக்க முடியும்! எம்.ஜி.ஆர் சினிமாவுல மட்டுமில்லை, நிஜத்திலேயும் ஹீரோதான். நல்ல உள்ளத்தோடு எல்லாருக்கும் உதவி செய்யணும்னு சொல்லுவார், அதைச் செயல்படுத்துவார்.

எம்.ஜி.ஆருடன் சரோஜா தேவி

ஒன்றா, இரண்டா… எல்லா விஷயமும் அவர்கிட்டே பிடிக்கும். சிவாஜி ரொம்ப டிசிப்ளினை கடைப்பிடிப்பார். ஏழு மணிக்கு ஷூட்டிங்குன்னா ஷார்ப்பா வந்துடணும். நம்மளோட காட்சி முடியுற வரைக்கும் செட்டைவிட்டு எங்கேயும் போகக் கூடாதுன்னு இருப்பார். இதெல்லாம், நான் அவரிடம் கற்றுக்கொண்ட விஷயங்கள்.

“எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்தபோது செயல்படுத்திய திட்டங்களில் உங்களைக் கவர்ந்த திட்டம்?’’

“எம்.ஜி.ஆர் கொண்டுவந்த எல்லா திட்டங்களுமே எனக்குப் பிடித்தவைதான், மக்களுக்கும் பிடித்தவைதான். மக்களை இதயத்திலிருந்து நேசித்தார். அதனாலதான், மக்கள் அவரை இதய தெய்வமா கொண்டாடினாங்க. அவர் கொண்டுவந்த திட்டங்களில் எனக்கு ரொம்ப ரொம்பப் பிடித்தது, சத்துணவு திட்டம்தான். இப்போவரை அது தொடர்ந்துக்கிட்டிருக்கு. ஒரு குழந்தை பசியோடு இருந்தா படிக்க முடியாது என்பதை உணர்ந்து, அவர்களுக்கு சத்துணவைக் கொடுத்து படிக்கவெச்சதை மறக்க முடியுமா? அதே மாதிரி, ரிக்‌ஷா தொழிலாளர்களுக்காக நிறைய நல்ல விஷயங்கள் செஞ்சிருக்கார். அதெல்லாம் எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவர் நாயகனா இருக்கும்போதும் சரி, முதல்வரா இருக்கும்போதும் சரி… ஒரே மாதிரிதான் நடந்துக்கிட்டார்.”

சரோஜா தேவி
சரோஜா தேவி

“ஜெயலலிதாவுக்கும் உங்களுக்குமான நட்பு?’’

“ஜெயலலிதாவை எனக்கு ரொம்பப் பிடிக்கும். அவங்களுக்கும் என்னை ரொம்பப் பிடிக்கும். என்னை அடிக்கடி வரவைத்து, நேரில் சந்தித்து பழைய விஷயங்களைப் பத்திப் பேசுவாங்க. நடிகையா இருக்கும்போது எப்படி நட்பா பேசுவாங்களோ, அதே நட்போடதான் முதல்வராவும் என்னிடம் பேசுனாங்க. முதல்வரா மக்களுக்காக நிறைய செஞ்சிருக்காங்க.”

“உங்கள் திரைவாழ்க்கையில் உங்களுக்கு மன நிறைவைக் கொடுத்த படம் எது?’’

“நான் நடிச்ச படங்களிலேயே எனக்கு பிடித்த கேரக்டர்னா ‘இருவர் உள்ளம்’ படத்தில் நடிச்சதுதான். நல்ல படம் மட்டுமில்லை, எனக்கு ரொம்ப பாராட்டுகளைக் குவித்த படம். இந்தப் படத்துக்கு கலைஞர்தான் திரைக்கதை, வசனம் எழுதினார். அவர், எழுதின டயலாக்கைத்தான் பேசி நடிச்சேன். படத்தை பார்த்துட்டு ‘ரொம்ப நல்லா நடிச்சிருக்கே’ன்னு கலைஞர் பாராட்டினார். அவரோட எழுத்து, பேச்சு எனக்கு ரொம்பப் பிடிக்கும்.”

சரோஜா தேவி
சரோஜா தேவி

“சினிமா வாழ்க்கையில் உங்கள் சாதனையாகக் கருதுவது..?’’

“சினிமா இண்டஸ்ட்ரீல இதுவரைக்கும் என்மேல ஒரு கெட்ட பேருகூடக் கிடையாது. இதுவே மிகப்பெரிய சாதனைதான். நான் கவர்ச்சியா நடிச்சேன்னு யாராலும் சொல்ல முடியாது. டீசன்ட்டா டிரெஸ் பண்ணுவேன். எனக்குன்னு சினிமாவுல ஒரு பாலிசியை வகுத்துக்கிட்டு ஒரே நேர்கோட்டுல பயணிச்சேன். நல்ல நடிகைன்னு பேர் வாங்கினேன். தொழிலை நான் ரொம்ப நேசிச்சேன். எல்லார்கிட்டயும் ரொம்ப அன்பா இருப்பேன், மரியாதை கொடுப்பேன். யார் வந்தாலும் எழுந்து நின்னுதான் வணங்குவேன். அதனால, எல்லாருக்குமே என்னை ரொம்பப் பிடிக்கும். கடவுள் தயவால் நல்ல நல்ல கேரக்டர்களில் நடிச்சு பேரும் புகழும் கிடைச்சுது. இதைவிட, வேறு என்ன சாதனை வேணும்?”

“இளம் வயதிலேயே உங்கள் கணவர் இறந்து விட்டார். நீங்கள் ஏன் மறுமணம் செய்து கொள்ளவில்லை என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் இருந்ததே… உங்கள் குடும்பத்திலிருந்து வேறு யாரும் ஏன் நடிப்புத்துறைக்குள் வரவில்லை?’’

“என் கணவர் ரொம்ப அன்பானவர். என்னை அக்கறையா பார்த்துக்கிட்டார். எல்லா விஷயத்திலும் நேர்த்தியா நடந்துக்குவார். மறுமணம் பண்ணிக்காததெல்லாம் ஒரு விஷயமா… எனக்கு இஷ்டம் இல்லை. மறுமணம் செஞ்சுக்கத் தோணவும் இல்லை. அதே மாதிரி, என் பிள்ளைங்களுக்கு நடிப்புத் துறைக்குள்ள வர்றதுல விருப்பமில்லை.

சரோஜா தேவி
சரோஜா தேவி

நான் யாரையும் கட்டாயப்படுத்தலை. என் குடும்பமே ரொம்ப அன்பான குடும்பம். அப்பா, அம்மாவுக்கு நாங்க எல்லாருமே பெண் குழந்தைங்கதான். நான்தான் கடைக்குட்டி. சகோதரிகள்ல ஒரே ஒரு அக்கா மட்டும்தான் உயிரோட இருக்காங்க. எப்போதும் அதே அன்போடு இருக்கோம்.” என்று பகிர்ந்திருக்கிறார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.