போலி லோன் ஆப்ஸை கண்டுபிடிப்பது எப்படி? 5 எச்சரிக்கை அறிகுறிகள்

How to Spot Fake Loan Apps: மொபைல் ஆப்ஸ் மூலம் தனிநபர் கடன் பெறுவது இப்போது மிகவும் எளிதாகிவிட்டது. சில கிளிக்களில், வங்கிக்குச் செல்லாமலேயே கடனுக்கு விண்ணப்பிக்கலாம். இது வசதியாக இருந்தாலும், இதில் சில ஆபத்துகளும் உள்ளன. ஆன்லைன் சந்தையில் பல கட்டுப்பாடற்ற கடன் ஆப்ஸ் உள்ளன, அவை மறைமுக கட்டணங்களை வசூலிக்கலாம், உங்கள் தரவுகளை தவறாக பயன்படுத்தலாம் அல்லது கடனை திருப்பிச் செலுத்த தாமதமானால் உங்களை துன்புறுத்தலாம். இதனால் பல ஆபத்துகளையும், பின் விளைவுகளையும் நீங்கள் சந்திக்க நேரிடும். மன உளைச்சலும் ஏற்பட வாய்ப்புகள் இருக்கின்றன. 

ஒரு டிஜிட்டல் கடன் ஆப்பை பயன்படுத்துவதற்கு முன் கவனிக்க வேண்டிய 5 எச்சரிக்கை அறிகுறிகள்:

1. ஆப் சட்டப்பூர்வமாக பதிவு செய்யப்பட்டதா?

முதலில், அந்த ஆப் RBI (ரிசர்வ் வங்கி ஆப் இந்தியா) அங்கீகரித்த வங்கி அல்லது NBFC (நான்-பேங்கிங் நிதி நிறுவனம்) உடன் இணைக்கப்பட்டதா என்பதை சரிபார்க்க வேண்டும். போலி ஆப்ஸ் பெரும்பாலும் இந்த இரண்டு அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டவையாக இருக்காது. எனவே, லோன் ஆப் குறித்து RBI இணையதளத்தில் சென்று கடன் வழங்கும் நிறுவனத்தின் பெயரை சரிபார்க்கவும். அங்கு இல்லை என்றால் அவை போலி லோன் செயலியாக இருக்கும்.

2. கட்டணங்கள் தெளிவற்றதாகவோ அல்லது மறைக்கப்பட்டதாகவோ உள்ளதா?

நம்பகமான கடன் ஆப், வட்டி விகிதம், கடன் காலம், செயலாக்க கட்டணம், தாமத கட்டணம் மற்றும் மொத்த திருப்பிச் செலுத்தும் தொகை பற்றி தெளிவாக தகவலை வழங்கும். இந்த விவரங்கள் தெளிவாக இல்லையென்றால், அது ஒரு பெரிய எச்சரிக்கை அடையாளம். இதனை தெரிந்து கொள்ள நீங்கள் கடன் ஒப்பந்தத்தை கவனமாகப் படிக்கவும்.

3. ஆப் அதிகப்படியான அனுமதிகளை கோருகிறதா?

போலி கடன் ஆப்ஸ் பெரும்பாலும் உங்கள் காண்டாக்ட்ஸ், புகைப்படங்கள், இருப்பிடம், கேமரா அல்லது மைக்ரோஃபோன் அணுகலை கோரும். இது கடனைப் பெறுவதற்குத் தேவையில்லை, ஆனால் தாமதமானால் உங்களை மிரட்ட பயன்படுத்தப்படலாம். அவற்றை இன்ஸ்டால் செய்யும்போது PAN, ஆதார் போன்ற அடிப்படைத் தகவல்களை மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கவும்.

4. மோசமான விமர்சனங்கள் அல்லது புகார்கள் உள்ளதா?

ஆப் மீது குறைந்த ரேட்டிங், பல புகார்கள் அல்லது தீர்க்கப்படாத பிரச்சினைகள் இருந்தால், அது நம்பகமற்றது என்பதற்கான அறிகுறி. நீங்கள் பயன்படுத்த விரும்பும் செயலி குறித்து Google Play Store/App Store-ல் விமர்சனங்களைப் படிக்கவும்.

5. கஸ்டமர் சப்போர்ட் இல்லையா?

ஒரு நம்பகமான கடன் ஆப்பில் கஸ்டமர் கேர் எண், மின்னஞ்சல் அல்லது புகார் முறை உள்ளது. ஆனால் போலி ஆப்ஸில் இவை இருக்காது. அதிகாரப்பூர்வ தொடர்பு விவரங்கள் இல்லாத ஆப்ஸைத் தவிர்க்கவும்.

டிஜிட்டல் கடன் பயனுள்ளதாக இருந்தாலும், மோசடி ஆப்ஸ் மூலம் ஆபத்துகள் உள்ளன. எனவே, எப்போதும் ஆராய்ந்து, கவனமாக படித்து, சரியான ஆப்பைத் தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் பணத்தையும், தனியுரிமையையும் பாதுகாக்கும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.