ரயிலில் இருந்து கர்ப்பிணியை கீழே தள்ளிவிட்ட குற்றவாளிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை – முழு விவரம்!

திருப்பத்தூர்: காட்பாடி அருகே ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்ட இளைஞருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருப்பத்தூர் நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரயில்வே மற்றும் தமிழக அரசு தலா ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க நீதிபதி மீனாகுமாரி உத்தரவிட்டுள்ளார்.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தை சேர்ந்த கணவன் – மனைவி இருவரும், திருப்பூரில் தங்கி அங்கு உள்ள பனியன் கம்பெனியில் வேலை செய்து வந்தனர். கர்ப்பமாக இருந்த மனைவியை, கடந்த பிப்ரவரி 6-ம் தேதி மருத்துவ பரிசோதனைக்காக சித்தூர் மாவட்டத்துக்கு அவரது கணவர் ரயிலில் அனுப்பி வைத்தார். கோவையில் இருந்து ஜோலார்பேட்டை வழியாக திருப்பதி வரை செல்லும் இன்டர்சிட்டி விரைவு ரயிலின் பொது பெட்டியில் அந்த கர்ப்பிணி பயணம் செய்தார்.

மறுநாள் 7-ம் தேதி நள்ளிரவு 12.10 மணி அளவில் வேலூர் மாவட்டம் குடியாத்தம் – கே.வி.குப்பம் இடையே ரயில் சென்றபோது, ரயிலில் உள்ள கழிப்பறையை பயன்படுத்த அவர் சென்றார். அப்போது, கழிப்பறை அருகே அமர்ந்திருந்த இளைஞர் ஒருவர் அவரை வழிமறித்து, பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். அதிர்ச்சியடைந்த பெண் கூச்சலிட்டுள்ளார். இதையடுத்து, ஓடும் ரயிலில்இருந்து அந்த பெண்ணை கீழே தள்ளிவிட்ட இளைஞர், வேறு பெட்டிக்கு மாறி தப்பினார்.

ரயிலில் இருந்து பெண் கீழே விழுந்ததை பார்த்த சக பயணிகள் உடனே ரயில்வே கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் விரைந்து வந்தனர். படுகாயம் அடைந்த நிலையில் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த பெண்ணை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவரது கை,கால் எலும்புகளில் முறிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தனர். மேலும், ரயிலில் இருந்து கீழே விழுந்ததில், அவரது வயிற்றில் இருந்த 4 மாத சிசு உயிரிழந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

இதற்கிடையே, ரயில்வே எஸ்.பி.உத்தரவின்பேரில் ஜோலார்பேட்டை ரயில்வே காவல் ஆய்வாளர் (பொறுப்பு) ருவந்திகா தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தப்பிய இளைஞர் குறித்து விசாரணை நடத்தப்பட்டது. அந்த நபர் வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த பூஞ்சோலை கிராமத்தை சேர்ந்த ஹேமராஜ் (27) என்பதும், கடந்த 2022-ம் ஆண்டில் ஓடும் ரயிலில் ஒரு பெண் பயணியிடம் செல்போனை பறித்த வழக்கிலும், கடந்த 2024-ம் ஆண்டில் சென்னையை சேர்ந்த 29 வயது இளம்பெண் கொலை வழக்கிலும் கைது செய்யப்பட்டவர் என தெரிய வந்தது. 2 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டு சமீபத்தில்தான் ஜாமீனில் வந்துள்ளார் என்றும் விசாரணையில் தெரிய வந்தது.

இதை தொடர்ந்து, ஜோலார்பேட்டை ரயில்வே போலீஸார் வழக்கு பதிவு செய்து, ஹேமராஜை கைது செய்தனர்.இதுதொடர்பான வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த 11-ம் தேதி ஹேமராஜ் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு, அவருக்கான தண்டனை விவரம் ஜூலை 14-ம் தேதி (நேற்று) அறிவிக்கப்படும் என திருப்பத்தூர் நீதிமன்றம் தெரிவித்தது.

7 பிரிவுகளின் கீழ் தண்டனை: அதன்படி, இந்த வழக்கில் நீதிபதி மீனாகுமாரி நேற்று தீர்ப்பளித்தார். ‘‘ஓடும் ரயிலில் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து அவரை கீழே தள்ளிவிட்ட ஹேமராஜூக்கு, 7 பிரிவுகளின்கீழ் ஆயுள் முழுவதும், அதாவது சாகும்வரை சிறை தண்டனையும், ரூ.75 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு ரயில்வே சார்பில் ரூ.50 லட்சம்,தமிழக அரசு சார்பில் ரூ.50 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும்’’ என்று நீதிபதிதீர்ப்பில் கூறியுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.