ஆபத்தான உணவுகள் பட்டியலில் சமோசா, ஜிலேபி? – மத்திய அரசு மறுப்பு

புதுடெல்லி,

இந்தியாவில் உடல் பருமன் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. 2050-ம் ஆண்டுக்குள் 44.9 கோடிக்கும் அதிகமான இந்தியர்கள் அதிக எடை அல்லது உடல் பருமனாக இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, நகர்ப்புறங்களில் வசிப்பவர்களில் 5-ல் ஒருவர் உடல் பருமனாக இருப்பதாக ஆய்வில் கண்டறியப்பட்டு உள்ளது.

உடலுக்கு தீங்கு விளைவிக்கும் மோசமான உணவு வகைகள் மற்றும் உடல் செயல்பாடு இல்லாமை ஆகியவற்றால் குழந்தைகளுக்கும் உடல் பருமன் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் நாக்பூர் எய்ம்ஸ் உட்பட அனைத்து மத்திய அரசு மருத்துவமனைகளிலும், உணவுப்பொருட்களில் இருக்கும் எண்ணை மற்றும் சர்க்கரை அளவுகளை பட்டியலிட்டு பலகைகள் வைக்க மத்திய சுகாதார அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதில் நாம் தினமும் உண்ணும் அன்றாட சிற்றுண்டி உணவுகளில் எவ்வளவு கொழுப்பு மற்றும் சர்க்கரை இருக்கிறது என்பதை விளக்கும் பட்டியல்கள் இடம்பெறுகின்றன. உடலுக்கு தேவையில்லாத உணவை நீக்குவதற்கான முதல் படி இதுவாகும். சமோசா, ஜிலேபி ஆகியவை அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவு வகைகள் ஆகும். ஆனால் இந்த 2 உணவுகளும் உடலுக்கு தீங்கானது என்று கூறப்படுகிறது. இதன் மூலம் சமோசா, ஜிலேபி ஆகியவை விரைவில் சுகாதார எச்சரிக்கை பட்டியலில் சேரலாம் என்று கருதப்படுகிறது.

சிகரெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் இருப்பது போல சமோசா, ஜிலேபி அடைத்து விற்கப்படும் பாக்கெட்டுகளில் உள்ள லேபிளில் இந்த எச்சரிக்கை வாசகம் விரைவில் இடம்பெற உள்ளது என்று இந்திய இருதயவியல் சங்கத்தின் நாக்பூர் பகுதி தலைவர் அமர் அமலே கூறினார். நீரிழிவு, இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற நோய்களுக்கு எதிரான நடவடிக்கையின் ஒரு பகுதியாக மருத்துவர்கள் மற்றும் சுகாதார ஆதரவாளர்கள் இதை பார்க்கிறார்கள். இந்த எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் பட்டியலில் மேலும் பல உணவுகளும் சேர உள்ளன.

இந்த நிலையில், சிகரெட் வரிசையில் சமோசா, ஜிலேபிக்கும் எச்சரிக்கை வாசகம் வர உள்ளதாக வெளியான தகவலுக்கு மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. எந்த உணவையும் குறிப்பிட்டு எச்சரிக்கை செய்ய திட்டமிடப்படவில்லை என்றும் உடல் பருமனை குறைக்க எண்ணெய், சர்க்கரையின் அளவு தொடர்பாகத்தான் எச்சரிக்கை வாசகம் வெளியிடவிடவே திட்டமிட்டு இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.