'எப்போதும் போல பாதுகாப்பு ஏற்பாடுகள் இருந்தன' – சண்டை பயிற்சியாளர் உயிரிழந்தது குறித்து பா.ரஞ்சித்

பா. ரஞ்சித்தின் `வேட்டுவம்’ படப்பிடிப்பின் போது சண்டை பயிற்சியாளர் மோகன் ராஜ்  உயிரிழந்தது தொடர்பாக பா.ரஞ்சித் விளக்கம் அளித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், “ஜூலை 13-ம் தேதி காலை தமிழ்நாட்டின் நாகப்பட்டிணம் மாவட்டத்தில் நடைபெற்று வந்த `வேட்டுவம்’ படப்பிடிப்பு தளத்தில், திறமையான சண்டைக் கலைஞரும், எங்களுடன் நீண்ட காலம் பணியாற்றியவருமான திரு. மோகன் ராஜ் அவர்களை நாங்கள் எதிர்பாரா விதத்தில் இழந்தோம்.

மோகன் ராஜ்
மோகன் ராஜ்

தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது

அவரின் மனைவி, குழந்தைகள்,குடும்பம் மற்றும் அவரை சக பணியாளராக, நண்பராக அறிந்த அனைவரையும் தேற்றும் வழியறியாது எங்கள் உள்ளம் கலங்குகிறது. எப்போதும் போலவே கிராஷ் காட்சியை எடுக்கும் முன்பு செய்யும் தெளிவான திட்டமிடல், பாதுகாப்பு ஏற்பாடுகள், எங்களின் வேண்டுதல்கள், வாழ்த்துக்கள் என எல்லாம் இருந்தன.

சண்டைக்காட்சிகளை திட்டமிடுவதில், செயல்படுத்துவதில் தெளிவும், நேர்த்தியும் கொண்டிருந்த நிகரற்ற கலைஞரான அவருடைய வழிகாட்டுதலையும், எங்கள் ஸ்டண்ட் இயக்குனர் திலீப் மாஸ்டரின் விளக்கமான திட்டமிடலையும், பாதுகாப்பு தயாரிப்புகளையும் அனைவரும் பெரிதும் மதித்தோம்

பேரிழப்பு

தவறாமல் பின்பற்றினோம். ஆனால், அந்த நாள் அண்ணன் மோகன் ராஜ் உயிரழப்பில் முடிந்தது என்பது தாங்கொணா அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கிறது. மோகன் ராஜ் அண்ணன் அவர்கள், தன் ஸ்டண்ட் டீம், எங்களது குழு, என அனைவரின் மரியாதையையும், அன்பையும் பெற்றவர். செழுமையான அனுபவமும், சாதனைகளும் கொண்டு தன் நேர்த்தியான வேலையால் தன் குடும்பத்தை, சக ஸ்டண்ட் வீரர்களை, இயக்குனர்களை பெருமைப்படுத்திய கலைஞர் அவர்.

மோகன் ராஜ்
மோகன் ராஜ்

எங்கள் ஒவ்வொருவரின் மரியாதையும், அன்பும், வந்தனங்களும் என்றென்றென்றும் அவருக்கு சமர்ப்பணம். இது எங்கள் அனைவரையும் உலுக்கியிருக்கும் பேரிழப்பு. ஒரு கணவராக, தந்தையாக, பிரமாதமான சண்டைக் கலைஞராக, நேர்த்தியான மனிதராக வாழ்ந்த மோகன் ராஜ் அண்ணாவின் இறப்பிற்கு எங்களின் ஆழ்ந்த இரங்கல்கள். ஆகச்சிறந்த ஸ்டண்ட் கலைஞராய் அறியப்பட விரும்பிய அவரை என்றும் அப்படியே நாங்கள் நினைவில் போற்றுவோம்” என்று பதிவிட்டிருக்கிறார்.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.