கடலூர்: ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தை கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நேற்று தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களைத் தேடி இனி அதிகாரிகள் வருவார்கள் என்று கூறினார்.
காமராஜர் பிறந்தநாளையொட்டி, சிதம்பரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காமராஜர் படத்துக்கு மலர்கள் தூவி மரியாதை செலுத்திய முதல்வர் ஸ்டாலின், தொடந்து பரமேஸ்வரநல்லூர் பகுதியில் அமைக்கப்பட்ட அரங்கில் பேசியதாவது: 2021-ம் ஆண்டுக்கு முன்பு ‘உங்கள் தொகுதியில் ஸ்டாலின்’ என அனைத்துத் தொகுதிகளிலும் மனுக்களைப் பெற்றோம். ஆட்சிப் பொறுப்பேற்ற பிறகு ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்று தனித் துறையை உருவாக்கி, அந்த மனுக்களுக்கு 100 நாட்களில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. திமுக ஆட்சியின் மீது நம்பிக்கைவைத்து, பல்லாயிரக்கணக்கான மனுக்களை மக்கள் வழங்கினர். அதற்காக ‘முதல்வரின் முகவரி’ என்ற தனித் துறையை உருவாக்கி, மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது.
அதன் பிறகு ‘மக்களுடன் முதல்வர்’ என்ற திட்டத்தை தொடங்கி, தமிழ்நாடு முழுவதும் 5 ஆயிரம் இடங்களில் முகாம்கள் நடத்தி, பல லட்சம் மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டது. தற்போது தொடங்கப்பட்டுள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் நடைபெறும். தன்னார்வலர்கள் வீடுவீடாக வந்து மக்களின் குறைகளைக் கேட்டு, 46 சேவைகளுக்கான விண்ணப்பங்களை வழங்க உள்ளனர்.
‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் மட்டும் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பம் வழங்கப்படும். தகுதி உள்ள மகளிர்க்கு கண்டிப்பாக மகளிர் உரிமைத்தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த திட்டத்தின்கீழ் சேவைகளைச் செய்ய மக்களைத் தேடி அதிகாரிகள், அலுவலர்கள் வருவார்கள். இந்த மேடையில் மார்க்சிய இயக்கத் தலைவர்கள், காந்திய வழித் தலைவர்கள், அம்பேத்கர் வழித் தலைவர்கள் ஒற்றுமையாக அமர்ந்திருக்கிறோம். இதைத்தான் ‘ஓரணியில் தமிழ்நாடு’ என்று சொல்கிறேன். இதேபோல, தமிழ்நாடு ஓரணியில் நிற்கும்போது, டெல்லி காவி அணியின் கனவுத் திட்டமும் பலிக்காது.
இளையபெருமாளுக்கு மரியாதை.. அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு கமிட்டி தலைவராக இளையபெருமாள் இருந்தபோது, நாடு முழுவதும் பயணித்து, பட்டியலின மக்களின் மீதான சாதியக் கொடுமைகளை ஆய்வுசெய்து, அறிக்கையை உருவாக்கினார். அவர் அளித்த அறிக்கை, சாதி அமைப்பை துல்லியமாகப் பதிவு செய்தது. அந்த அறிக்கையின் அடிப்படையில்தான் தமிழகத்தில் பல்வேறு சமூகத்தைச் சேர்ந்த 29 அர்ச்சகர்கள், வெவ்வேறு கோயில்களில் பணியாற்றி வருகிறார்கள்.
1998-ல் அம்பேத்கர் பெயரிலான தமிழக அரசு விருதை முதன்முதலாக இளையபெருமாளுக்கு அப்போதைய முதல்வர் கருணாநிதி வழங்கினார். சிதம்பரத்தில் நூற்றாண்டு அரங்கம் மற்றும் சிலையை தற்போது திறந்து வைத்திருப்பது, திராவிட மாடல் அரசு அவருக்கு செலுத்தும் நன்றியாகும். இவ்வாறு முதல்வர் பேசினார்.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, எம்ஆர்கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன், சாமிநாதன், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா. முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காதர் மொய்தீன், முன்னாள் காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, கடலூர் எம்.பி. விஷ்ணு பிரசாத், எம்எல்ஏ-க்கள் கடலூர் கோ.ஐயப்பன், நெய்வேலி சபா ராஜேந்திரன், பண்ருட்டி வேல்முருகன், காட்டுமன்னார்கோவில் சிந்தனைச்செல்வன், மாவட்ட ஆட்சியர் சிபிஆதித்யா செந்தில்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
46 சேவைகள்… முதல்வர் தொடங்கிவைத்துள்ள ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பட்டா மாற்றம், பிறப்பு-இறப்பு சான்றிதழ், மின் இணைப்பு, வேளாண் மானியம், மகளிர் உதவித்தொகை உள்ளிட்ட 46 சேவைகளுக்கான விண்ணப்பங்கள் பெறப்படும். பொதுமக்கள் இந்த முகாமில் வழங்கும் மனுக்களுக்கு அதிகபட்சமாக 45 நாட்களில் தீர்வுகாண இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மகளிர் உதவித்தொகை பெற விரும்புவோர் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாமில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்றும் அரசுத் தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்துக்காக நகர்புறப் பகுதிகளில் 3,768 முகாம்களும், ஊரகப் பகுதிகளில் 6,232 முகாம்களும் நடத்தப்பட உள்ளன.