சென்னை: கோவை, நீலகிரியில் ஜூலை 17ம் தேதி முதல் 5 நாட்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான செய்திக் குறிப்பு: ”மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக நாளை தமிழகத்தின் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிமீ வேகத்தில் வீசக்கூடும்.
கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் நாளை கனமழையும், 21ம் தேதி வரை கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரியில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நாளை அதிகபட்ச வெப்ப நிலை 35.6 – 37.4 டிகிரி பாரன் ஹீட் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். இதனால் ஓரிரு பகுதிகளில் அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னை மற்றும் புறநகரில் நாளை வானம் ஓரளவு மேக மூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 98.6 – 100.4 டிகிரியை ஒட்டியும், குறைந்த பட்ச வெப்பநிலை 80.6 – 82.4 டிகிரி பாரன் ஹீட்டை ஒட்டியும் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை: தென் தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக் கடல், தென்மேற்கு வங்கக்கடல், அதையொட்டிய தென்கிழக்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடலின் சில பகுதிகள், கேரள – கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நாளை 60 முதல் 65 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்.
மழை, வெயில்: தமிழகத்தில் இன்று காலை நிலவரப்படி கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக சென்னை விம்கோ நகர், மணலியில் தலா 8 செ.மீ மழை பதிவானது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 102 டிகிரி பாரன் ஹீட் வெப்ப நிலை பதிவானது” என்று செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.