114 வயது மாரத்தான் ஓட்டப் பந்தய வீரர் ஃபவுஜா சிங் சாலை விபத்தில் உயிரிழப்பு

உலகின் வயதான மாரத்தான் ஓட்டப்பந்தய வீரர் என்ற பெருமையைப் பெற்ற ஃபவுஜா சிங், தனது 114 வயதில் சாலை விபத்தில் காலமானார்.

ஜலந்தர் – பதான்கோட் நெடுஞ்சாலையில் கார் மீது மோதியதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும் அவர் அங்கு சிகிச்சை பலனின்றி காலமானார்.

அவரது மறைவுக்கு பஞ்சாப் ஆளுநர் குலாப் சந்த் கட்டாரியா இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட இரங்கல் செய்தியில் “புகழ்பெற்ற மாரத்தான் ஓட்டப் பந்தய வீரரும், மீள்தன்மை மற்றும் நம்பிக்கையின் நீடித்த அடையாளமுமான சர்தார் ஃபவுஜா சிங்கின் மறைவால் நான் மிகவும் வருத்தமடைந்தேன்.

114 வயதிலும், அவர் தனது வலிமை மற்றும் அர்ப்பணிப்பால் இளம் தலைமுறைகளைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தினார். 2024 டிசம்பரில் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள அவரது கிராமமான பியாஸிலிருந்து இரண்டு நாள் ‘நாஷா முக்த் – ரங்லா பஞ்சாப்’ அணிவகுப்பின் போது அவருடன் நடந்து செல்லும் பெருமை எனக்குக் கிடைத்தது” என்று அவர் தெரிவித்தார்.

1911-ம் ஆண்டு ஏப்ரல் 1 அன்று ஜலந்தரில் உள்ள பியாஸ் கிராமத்தில் பிறந்தவர் ஃபவுஜா சிங். அவருக்கு வயது ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. அவரது மகன் குல்தீப் மற்றும் அவரது மனைவியின் மரணம், அவரை வாழ்க்கையில் ஒரு புதிய மாற்றத்தை நோக்கி செல்ல தூண்டியது. 89 வயதில், அவர் ஓட்டப் பந்தயத்தில் தீவிரமாக ஈடுபட்டார். வெளிநாட்டில் வசிக்கும் அவரது பிள்ளைகள் இந்தியா வந்தபிறகே அவரது இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.