புதுடெல்லி,
நாட்டில் பொதுமக்களுக்கு சட்ட ரீதியாக நீதி கிடைக்க வழிவகை செய்யும் கோர்ட்டுகளுக்கு நாள்தோறும் நீதிபதிகள், வழக்கறிஞர்கள், வழக்கு தொடுத்தவர்கள் மற்றும் கோர்ட்டு ஊழியர்கள் என பலர் வந்து செல்வார்கள். ஆனால், அவர்களுக்கு போதிய கழிவறை வசதிகள் இல்லாததுபற்றி வழக்கறிஞரான ரஜீப் கலிதா, சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.
இதுபற்றி கடந்த ஜனவரி 15-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரணை மேற்கொண்டது. அப்போது, முறையான தூய்மை என்பது அரசியல் சாசனத்தின் பிரிவு 21-ன் கீழ் அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கப்பட்டு உள்ளது என தெரிவித்தது.
அதன் தீர்ப்பில், ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் மாற்று பாலினத்தவர்கள் ஆகியோருக்கு தனித்தனியாக அனைத்து கோர்ட்டு வளாகங்களிலும் மற்றும் தீர்ப்பாயங்களிலும் கழிவறை வசதிகள் உள்ளன என உறுதி செய்யப்பட வேண்டும் என தெரிவித்தது. ஐகோர்ட்டுகள், மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இதனை உறுதி செய்யும்படி உத்தரவுகளை பிறப்பித்தது.
நீதிபதி ஒருவரின் தலைமையின் கீழ் ஐகோர்ட்டுகள் ஒவ்வொன்றிலும் ஒரு கமிட்டியை அமைக்கவும் உத்தரவிட்டது. இதேபோன்று சராசரியாக நாள் ஒன்றுக்கு கோர்ட்டுகளுக்கு எத்தனை பேர் வருகின்றனர் என எண்ணிக்கையை கவனித்தும், போதிய தனி கழிவறைகள் கட்டப்பட்டு, பராமரிக்கப்படுகின்றன என உறுதி செய்து, அதற்கான நிதியொதுக்குவது உள்ளிட்ட பணிகளுக்காக ஒரு விரிவான திட்டம் வகுக்கும்படியும் கமிட்டிக்கு உத்தரவிட்டது.
4 மாதங்களில் அதுபற்றிய ஒப்புதல் அறிக்கையை சமர்ப்பிக்கும்படியும் கேட்டு கொண்டது. இந்நிலையில், ஜார்கண்ட், மத்திய பிரதேசம், கல்கத்தா, டெல்லி மற்றும் பாட்னா ஐகோர்ட்டுகளே, இதுபற்றி எடுத்த நடவடிக்கைகள் பற்றிய விவரங்களை கோர்ட்டில் சமர்ப்பித்து உள்ளன. நாட்டில் மொத்தம் 25 ஐகோர்ட்டுகள் உள்ளன. மீதமுள்ள 20 ஐகோர்ட்டுகள் உத்தரவுக்கேற்ப நடந்து கொள்ளவில்லை.
இதுபற்றி சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா மற்றும் ஆர். மகாதேவன் அடங்கிய அமர்வு இன்று மீண்டும் விசாரித்தபோது, இதற்காக வேதனை தெரிவித்தனர். இந்தியாவின் அனைத்து கோர்ட்டு வளாகங்களிலும் மற்றும் தீர்ப்பாயங்களிலும் கழிவறை வசதிகள் உள்ளன என உறுதி செய்யப்பட வேண்டும் என கூறி அதுபற்றிய ஒப்புதல் அறிக்கையை சமர்ப்பிக்க 8 வார கால அவகாசமும் அளித்துள்ளனர்.
அப்படி, அடுத்த 8 வாரங்களில் அறிக்கைகளை சமர்ப்பிக்கவில்லை என்றால் அதற்கான எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் என நீதிபதிகள் அமர்வு கடுமையாக குறிப்பிட்டுள்ளது.