கொல்கத்தா: பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசுபவர்கள் சித்ரவதை செய்யப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, அதைக் கண்டித்து கொல்கத்தாவில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்.
பாஜக ஆளும் மாநிலங்களில் வங்க மொழி பேசுபவர்கள் குறிவைக்கப்படுவதாகவும், அவர்கள் இந்தியர் என்பதற்கான அடையாள அட்டைகளை வைத்திருந்தாலும் அவர்களை வங்கதேசத்தவர்கள் என குறிப்பிட்டு வங்கதேசத்துக்கு அனுப்புவதாகவும் திரிணமூல் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில், இதைக் கண்டித்து மேற்கு வங்கத் தலைநகர் கொல்கத்தாவிலும், பிற மாவட்ட தலைநகரங்களிலும் திரிணமூல் காங்கிரஸ் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
கொல்கத்தாவில் திரணமூல் காங்கிரஸ் தலைவரும் முதல்வருமான மம்தா பானர்ஜி தலைமையில் நடைபெற்ற கண்டன பேரணி இன்று (ஜூலை 16) மதியம் மத்திய கொல்கத்தாவின் கல்லூரி சதுக்கத்தில் இருந்து தொடங்கியது. இதில், திரிணமூல் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி உட்பட ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டனர். மழைக்கு மத்தியில் நகரின் முக்கிய சாலைகள் வழியாக 3 கிலோ மீட்டர் தூரம் சென்ற இந்தப் பேரணி, டோரினா கிராசிங் பகுதியில் நிறைவடைந்தது.
பேரணி நிறைவடைந்த இடத்தில் உரையாற்றிய மம்தா பானர்ஜி, “வங்க மொழி பேசும் மக்களை துன்புறுத்தவும், சிறிய அளவில் சந்தேகம் ஏற்பட்டாலும் அவர்களை கைது செய்யவும் பாஜக ஆளும் மாநிலங்களுக்கு மத்திய அரசு ரகசிய உத்தரவை பிறப்பித்துள்ளது. 22 லட்சம் வங்கமொழி பேசுபவர்கள் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் பணிபுரிகிறார்கள். வங்க மொழி பேசும் மக்களை துன்புறுத்த முயன்றால், பாஜகவுக்கு எதிரான எங்கள் உறுதி இன்னும் தீவிரமடையும். 2021 சட்டமன்றத் தேர்தலின்போது நடந்த நியா நானா ஆட்டம் மீண்டும் நடக்கும். அதற்கு பாஜகவினர் தயாராக இருக்க வேண்டும்.
இனி நான் வங்க மொழியில் இன்னும் அதிகமாகப் பேச முடிவு செய்துள்ளேன். முடிந்தால் என்னை கைது செய்து பாருங்கள். வங்க மொழி பேசுபவர்களை துன்புறுத்துவதற்கும் அவர்களை கைது செய்வதற்கும் வலுக்கட்டாயமாக வங்கதேசத்துக்கு திருப்பி அனுப்புவதற்கும் பாஜகவுக்கு யார் உரிமையை தந்தார்கள்? மேற்கு வங்கம் இந்தியாவின் ஒரு பகுதி இல்லையா?
தீவிர சூழ்நிலைகள், தீவிர எதிர் நடவடிக்கைகளைக் கோருகின்றன. நாங்கள் உங்களை உடல் ரீதியாக எதிர்த்துப் போராட மாட்டோம். ஆனால், துன்புறுத்தும் நடவடிக்கைகளை பாஜக நிறுத்திக் கொள்ளாவிட்டால் அதை உடனடியாக முடிவுக்குக் கொண்டு வருவது எப்படி என்பது திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்குத் தெரியும்” என தெரிவித்துள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடி நாளை மேற்கு வங்கத்துக்குச் செல்ல உள்ள நிலையில், இந்த ஆர்ப்பாட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.