Tamil Nadu Cyber Crime warning : ஆன்லைன் மோசடிகள் பெருகிவிட்ட நிலையில், அதில் இருந்து பாதுகாப்பாக இருக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ச்சியாக எச்சரிக்கை கொடுத்துக்கொண்டே இருக்கின்றன. குறிப்பாக சைபர் கிரைம் காவல்துறை ஆன்லைன் மோசடிகள் குறித்த விழிப்புணர்வுகளை சோஷியல் மீடியா உள்ளிட்ட அனைத்து பிளாட்பார்ம்களிலும் எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறது. அதிலும், என்னென்ன மோசடிகள் நடக்கிறது, எப்படி மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள், சைபர் கிரைம் மோசடிகளில் இருந்து பாதுகாப்பாக இருக்க என்ன செய்ய வேண்டும், மோசடியாளர்கள் எப்படி பொதுமக்களை அணுகுவார்கள் என்பது குறித்தும் சைபர் கிரைம் காவல்துறை விழிப்புணர்வு செய்து வருகிறது.
அந்தவகையில் இப்போது புதுவகையான ஆன்லைன் மோசடி குறித்து ஒரு எச்சரிக்கை பதிவை தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை வெளியிட்டுள்ளது. சிறிய தொகையை முதலீடு செய்தால் தினமும் 200 ரூபாய் வரை சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறுவதாகவும், பின்னர் அதிக தொகையை முதலீடு செய்யுமாறு வலியுறுத்தி, மோசடி கும்பல் மோசடி செய்வதாகவும் காவல்துறை எச்சரித்துள்ளது. இதுபோன்ற மோசடிகளில் இருந்து மக்கள் விழிப்புடனும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு சைபர் கிரைம் காவல்துறை எக்ஸ் பக்கத்தில் முதலீடு மோசடி குறித்த எச்சரிக்கை பதிவை வெளியிட்டுள்ளது. அதில், “மோசடி செய்பவர்கள் www.77look.com போன்ற போலி வலைதளங்களை பயன்படுத்தி, பொதுமக்கள் சிறிய முதலீடு செய்தால் தினமும் ரூ.200 வருமானம் பெறலாம். பரிந்துரைகளுக்கு கூடுதலாக பணம் தருவதாக உறுயளிக்கிறார்கள். அதாவது, மற்றவர்களை இந்த முதலீட்டில் சேர்த்தால் கூடுதல் பணம் கிடைக்கும் என வலியுறுத்துவார்கள். பின்னர் அதிக தொகை முதலீடு செய்யுமாறு கூறி ஏமாற்றுகிறார்கள். எனவே, குறைந்த தொகையில் அதிக லாபம், விரைவாக செயல்பட அழுத்தம், குறைந்த நேர சலுகைகள் குறித்து விழிப்பாக இருங்கள்” என சைபர் கிரைம் காவல்துறை எச்சரித்துள்ளது.
(@tncybercrimeoff) July 12, 2025
மேலும், முதலீடு செய்வதற்கு முன்பு முதலீட்டு தளம் SEBI -ல் பதிவு செய்யப்பட்டுள்ளதா என்பதை சரிபார்க்கவும். அதிகாரப்பூர்வ ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ள நிபந்தனைகளை அறிந்துகொள்ளுங்கள், உரிமம் பெற்ற நிதி ஆலோசகரை அணுகவும் எனவும் சைபர் கிரைம் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. சைபர் கிரைம் புகார்களுக்கு 1930 என்ற தொலைபேசி எண் அல்லது www.cybercrime.govi.in தளத்தில் புகார் அளிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.