“பதிலடி கொடுக்காவிட்டால் காமராஜர் ஆன்மா மன்னிக்காது..'' – திருச்சி சிவா பேச்சு குறித்து ஜோதிமணி

தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா காமராஜரைப் பற்றி பேசிய கருத்துகள் எதிர்வினைகளை கிளப்பியிருக்கிருக்கிறது. இந்நிலையில், கரூர் தொகுதி காங்கிரஸ் எம்.பி தனது சமுகவளைதள பக்கத்தில் தனது எதிர்ப்பை பதிவு செய்திருக்கிறார். அந்த பதிவில்,

‘பெருந்தலைவர் காமராஜர் நேர்மைக்கும், நிர்வாகத்திறமைக்கும் மட்டுமல்ல எளிமைக்கும் பெயர் போனவர் என்பதை உலகறியும். தமிழ்நாட்டில் காமராஜர் கால்தடம் படியாத இடம் ஏதாவது இருக்கிறதா என்று ஆச்சர்யப்படக்கூடிய அளவில் தமிழ்நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்தவர் பெருந்தலைவர் காமராஜர். அந்த மூலை முடுக்குகளில் எல்லாம் ஏசி அறைகளும், ஐந்து நட்சத்திர விடுதிகளும் இல்லை.

ஒரு முதலமைச்சராக அரசினர் விடுதியில் தங்கி வெப்பம் அதிகமாக இருந்தால் மரத்தடியில் கட்டிலைப் போட்டு உறங்கியவர் காமராஜர். தனக்கு காவலாக நின்றவர்களைக் கூட உறங்கச் சொல்லிவிட்டு தனித்தே உறங்கிப் பழக்கப்பட்ட எளிமையாளர்.

அவர் ஏ.சி அறை இல்லாமல் உறங்கமாட்டார் என்று சகோதரர் திரு திருச்சி சிவா அவர்கள் சொல்வது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது. எமது தலைவர் காமராஜருக்கு எதிராக கடந்த காலத்தில் அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு பரப்பப்பட்ட கட்டுக்கதைகளின் தொடர்ச்சியாகவே இதைப் பார்க்க வேண்டியுள்ளது. 

ஜோதிமணி

காமராஜர் வாழ்ந்த வீட்டிற்கு காங்கிரஸ் கட்சி வாடகை கொடுத்து வந்தது. அது, அவரது சொந்த மாளிகை என்பது போன்ற திமுக பரப்பிய கட்டுக்கதைகளாலேயே காமராஜர் என்ற இந்த மண்ணின் மாபெரும் ஆளுமை தேர்தல் களத்தில் வீழ்த்தப்பட்டார் என்பது வரலாறு. 

காமராஜருக்கு எதிராகப் பரப்பப்படுகிற கட்டுக்கதைகளுக்கு சரியான பதிலடி கொடுக்காமல் இருந்தால் காமராஜர் ஆன்மா நம்மை மன்னிக்காது. அவரின் பெயராலேயே காங்கிரஸ் கட்சி தமிழ் மண்ணில் இன்றளவும் அரசியல் களத்தில் நிற்கிறது என்பதை ஒவ்வொரு காங்கிரஸ் தொண்டரும் நினைவில் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.