பள்ளி சைக்கிள் ஷெட் மீது விழுந்த காலணி; எடுக்க முயன்ற மாணவன் மின்சாரம் தாக்கி பலி.. கேரளாவில் சோகம்!

கேரள மாநிலம், கொல்லம் மாவட்டம், வலியபாடத்தைச் சேர்ந்த மனு என்பவரது மகன் மிதுன்(13). தேவலக்கரை பகுதியில் உள்ள ஆண்கள் உயர்நிலை பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்துவந்தான். நேற்று பள்ளிக்குச் சென்றபோது மாணவர்களுடன் சேர்ந்து விளையாடியுள்ளான் மிதுன். அப்போது மிதுனின் காலணி சைக்கிள் ஷெட்டின் மீது உள்ள இரும்பு ஷீட்டால் ஆன கூரையில் விழுந்துள்ளது. காலணியை எடுப்பதற்காக பள்ளி கட்டடத்தில் உள்ள ஜன்னல் கம்பிகளை பிடித்து சைக்கிள் ஷெட் மீது ஏறினான் மாணவன் மிதுன். சைக்கிள் ஷெட் மீது கிடந்த காலணியை எடுப்பதற்காக கூரைமீது மெல்ல நடந்து சென்றார். அப்போது மிதுன் திடீரென நிலை தடுமாறினார். கீழே விழாமல் இருப்பதற்காக எதிர்பாராமல் அருகில் சென்றுகொண்டிருந்த மின்கம்பியை பிடித்தார். அதில் மின்சாரம் பாய்ந்த நிலையில் மிதுன் மின்கம்பிகளின் மீது விழுந்தார். மும்முனை இணைப்பு சென்ற மின்கம்பிகள் என்பதால் மின்சாரம் தாக்கிய நிலையில் மயங்கி மின்கம்பிகளின் மீது தொங்கினார் மிதுன். அதை பார்த்த ஆசிரியர்கள் மிதுனை மீட்டு  மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

மிதுன் சைக்கிள் ஷெட் மீது சென்ற சி.சி.டி.வி காட்சி

பள்ளிகள் திறக்கும் முன்பு மாணவர்களின் பாதுகாப்பு குறித்து ஆய்வு செய்து பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தார். ஆனால், பள்ளி சைக்கிள் ஷெட் அருகிலேயே சென்ற மின்கம்பிகளை அதிகாரிகள் எப்படி கவனிக்காமல் விட்டார்கள் என்ற கேள்வி எழுந்தது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநரிடம் அறிக்கை கேட்டுள்ளார் அமைச்சர் சிவன்குட்டி.  இது குறித்து குழந்தைகள் உரிமை கமிஷன் வழக்குப்பதிவு செய்துள்ளது.

மின்சாரம் தாக்கி இறந்த மாணவன் மிதுன் உடலுக்கு அமைச்சர் சிவன்குட்டி அஞ்சலி செலுத்தினார்

மின்சாரம் தாக்கி இறந்த மாணவரின் குடும்பத்துக்கு கேரள மின்சார வாரியம் 5 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் சிவன்குட்டி பாரிப்பள்ளி மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குச் சென்று மாணவனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதுகுறித்து அமைச்சர் சிவன்குட்டி கூறுகையில், “மிதுன் கேரளத்தின் மகன் ஆவார். அவரது குடும்பத்தினருக்கு அரசு உதவிகளை செய்யும். ஸ்கவுட் அண்ட் கெய்ட்ஸ் சார்பில்

மிதுனின் பெற்றோருக்கு வீடு கட்டிக்கொடுக்கப்படும். அலட்சியமாக செயல்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார். மாணவன் மிதுனின் மறைவுக்கு முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.