ராய்பூர்: மதுபானக் கொள்கை முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் சத்தீஸ்கர் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாகேலின் மகனும், தொழிலதிபருமான சைதன்யா பாகேலை அமலாக்கத் துறை இன்று கைது செய்தது.
பிலாயில் உள்ள சைதன்யா பாகேலின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிகாலையில் நடத்திய சோதனைக்குப் பிறகு, அவர் கைது செய்யப்பட்டார். பூபேஷ் பாகேலின் முந்தைய ஆட்சிக் காலத்தில் நடந்ததாகக் கூறப்படும் மதுபானக் கொள்கை முறைகேடுகள் தொடர்பான வழக்கின் அடிப்படையில் இந்த கைது நடந்துள்ளது.
முந்தைய பூபேஷ் பாகேலின் ஆட்சியின்போது சுமார் ரூ.1,000 கோடி அளவுக்கு மதுபானக் கொள்கையில் முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் சைதன்யா பாகேல் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகளால் நடத்தப்படும் ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் மூலம் பணம் கைமாறியதாக அமலாக்கத் துறை குற்றஞ்சாட்டியுள்ளது.
சத்தீஸ்கர் ஊழல் தடுப்புப் பிரிவு பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் அடிப்படையில், அமலாக்கத் துறை இந்த பணமோசடி வழக்கை விசாரித்து வருகிறது. மாநில மதுபானக் கொள்கை தொடர்பான முறைகேட்டில் முன்னாள் கலால்துறை அமைச்சர் கவாசி லக்மா உட்பட 70 நபர்கள் மற்றும் நிறுவனங்களை அமலாக்கத் துறை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளது.
சைதன்யாவின் கைது குறித்து பேசிய பூபேஷ் பாகேல், “சட்டப்பேரவைக் கூட்டத்தொடரின் இறுதி நாளான இன்று, அதானி பிரச்சினையை நாங்கள் சபையில் எழுப்பவிருந்தபோது, மோடியும் அமித் ஷாவும் தங்கள் முதலாளியை மகிழ்விக்க என் வீட்டிற்கு அமலாக்கத் துறையை அனுப்பினர். அவர்கள் நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சித் தலைவர்களை குறிவைத்து, ஜனநாயகத்தின் கழுத்தை நெரிக்க முயற்சிக்கின்றனர்” என்று கூறினார்.