‘ஏய் ஹெலோ’ போனது ‘ஹெலோ ஏஐ’ வந்தது!! யாதுமானவன் ஆகும் AI… இது நல்லதா, கெட்டதா?

AI Latest News: காலையில் சீக்கிரம் எழ வேண்டுமா? எடை குறைக்க நடப்பதா ஓடுவதா என்ற குழப்பமா? சமையலில் அசத்த புதிய ரெசிபி வேண்டுமா? அலுவலக வேலையில் குழப்பமா? தீர்வு காண ஆலோசனை வேண்டுமா? லேட்டஸ்ட் சேல் பற்றிய விவரம் வேண்டுமா?

சமையலில் கற்றுக்கொடுக்க தாயாக வேண்டுமா? செலவுகளை கட்டுப்படுத்தும் வழி சொல்லும் தந்தையாக வேண்டுமா? சந்தேகங்களை தீர்க்கும் ஆசானாக வேண்டுமா? சோர்வின் போது தோள் கொடுக்கும் தோழனாக வேண்டுமா? இந்த நவீன காலத்தில் அத்தனை பரிமாணங்களையும் அழகாய் எடுக்கும் ஒன்று உண்டென்றால் அது AI!!

தொழில்நுட்பம் நம் உலகை மாற்றி வரும் இந்த காலகட்டத்தில்  AI நமக்கு எண்ணற்ற வழிகளில் உதவி நம் சார்பு நிலையை அதிகரித்து வருகின்றது. எதை கேட்டாலும் சில நொடிகளில் விரிவான பதிலைக் கொடுக்கும் இவற்றை யாருக்குத்தான் பிடிக்காமல் போகும்? ChatGPT, Gemini மற்றும் இதுபோன்ற பல AI சாட்போட்களிடம் சாதாரணமானது முதல் சிக்கலானது வரை அனைத்து வகையான கேள்விகளுக்கும் பதிலுண்டு. இந்த AI-மென்பொருட்கள், நம் வாழ்க்கையை முன்பை விட விரைவாகவும் எளிதாகவும் ஆக்கியுள்ளன. 2025 ஆம் ஆண்டில் ChatGPT 180 மில்லியன் மாதாந்திர பயனர்களைப் பதிவு செய்துள்ளது என்பது அதன் அதிகரிக்கும் பிரபலத்திற்கு ஒரு சான்று. 

AI பயன்பாட்டின் இருண்ட பக்கம்

– நமக்கு தேவையான பல உதவிகளை இவை செய்கின்றன என்பதில் சந்தேகமில்லை. 

– ஆனால், செயற்கை நுண்ணறிவின் அபரிமிதமான பயன்பாட்டிற்கு ஒரு இருண்ட பக்கமும் உள்ளது.

– இளைஞர்கள், குறிப்பாக GenZ பிரிவில் வருபவர்கள், வாழ்க்கை ஆலோசனைக்காகவும், நாம் அனைவரும் கடந்து செல்லும் மனநலப் போராட்டங்களை டிகோட் செய்யவும் இந்த மென்பொருட்களை அதிகளவில் பயன்படுத்துகின்றனர்.

– ChatGPT இன் தாய் நிறுவனமான OpenAI இன் CEO சாம் ஆல்ட்மேன், GenZ இளைஞர்கள் இந்த தளத்தை ‘வாழ்க்கை ஆலோசகராக’ பயன்படுத்துவதாக ஒப்புக்கொண்டுள்ளார். இவர்கள் பெரும்பாலும் காதல் உறவுகள் மற்றும் வாழ்க்கை ஆலோசனைக்காக ChatGPT -ஐ நாடுகிறார்கள்.

– ஆனால் இது ஆபத்தானது, ஏனெனில் சில நேரங்களில் AI ஸ்டீரியோடைப்கள் மற்றும் கோட்பாடுகளால் கட்டமைக்கப்பட்டு அதன் அடிப்படையில் பதில்களை வழங்குகிறது.

– X இன் AI சாட்போட்டான க்ரோக், சமீபத்தில் யூத எதிர்ப்பு பதில்களை வழங்கியதற்காக விமர்சனத்திற்கு உள்ளானது. இதனால் நிறுவனம் மன்னிப்பு கேட்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

– ChatGPT சில நேரங்களில் கடுமையான குற்றங்களில் இருந்து தப்பிப்பது எப்படி என்பது குறித்து மக்களுக்கு ஆலோசனை வழங்கியதாக ஒரு நார்வே ஆராய்ச்சி குழு கண்டறிந்துள்ளது.

– நவம்பர் 2024 இல், கூகிளின் ஜெமினி ஒரு மாணவரின் வீட்டுப்பாடத்தில் உதவி செய்து கொண்டிருந்தபோது அவரை மிரட்டி, ‘தயவுசெய்து இறந்து விடுங்கள்’ என்று கூறியதாக கூறப்படுகிறது.

– இது நடந்து ஒரு மாதத்திற்குப் பிறகு, அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஒரு குடும்பம், ஒரு AI சாட்போட் தங்கள் டீனேஜ் குழந்தைக்கு அபாயகரமான ஆலோசனைகளை வழங்கியதாகக்  கூறி வழக்குத் தொடர்ந்தது. அந்த டீனேஜ் குழந்தை AI சாட்போட்டிடம் தனது பெற்றோர் அதிக நேரம் மொபைல் பார்ப்பதற்காக தன்னை கண்டிப்பதாக கூறவே, அந்த AI சாட்போட், அந்த பெற்றோரை கொல்வதே அதற்கான நியாயமான பதிலாக இருக்கும் என ஆலோசனை கூறியதாக கூறப்பட்டது. 

AI மீதான கவர்ச்சிக்கு காரணம் என்ன?

– இத்தனை உணமை சம்பவங்கள் உள்ள போதிலும், மக்கள் தனிப்பட்ட ஆலோசனைக்காக AI ஐப் பயன்படுத்துகிறார்கள். விருப்பத்துடன் தங்கள் இதயங்களையும் மனதையும் அதற்கு முன் திறக்கிறார்கள். AI இத்தனை கவர்ச்சிகரமானதாக மாறியது எப்படி?

– கிரைஸ்ட் பல்கலைக்கழக மாணவி ஒருவர், “AI மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. ஏனெனில் ChatGPT விஷயங்களைப் பற்றி மிகவும் நியாயமான, தர்க்க அடிப்படையிலான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. மேலும் இது உங்கள் வயது, தொழில் தேர்வுகள் அல்லது கல்வியின் அடிப்படையில் முடிவுகளையோ அல்லது பரிந்துரைகளையோ வழங்காது.” என்று கூறுகிறார்.

– இதேபோல், 21 வயதான பொறியாளர் ஒருவர், “இது என் உணர்வுகளை ஒழுங்கமைக்க பயன்படுகிறது. ஒரு நண்பருக்கு மெசேஜ் அனுப்பி ரிப்ளை பெறுவது போன்ற ஒரு அனுபவம்தான் இது” என்று கூலாக சொல்கிறார்.

– 22 வயதான விளையாட்டு பத்திரிகையாளரான ஒருவர், தன்னை மோசமாகப் பேசும் ஒரு சக ஊழியரை எவ்வாறு கையாள்வது என்பது குறித்த ஆலோசனைக்காக AI ஐப் பயன்படுத்தியதாகவும், அந்த ஆலோசனை உண்மையில் அவருக்கு பெரிதும் உதவியது என்றும் கூறியுள்ளார்.

மனநல சிகிச்சைக்கு நம்பும் அபாயம்

– இந்தியாவில் மனநல சிகிச்சை இன்னும் சமூகத்தின் பொருளாதார ரீதியாக பணக்கார பிரிவுகளால் மட்டுமே பரவலாக அணுகப்படுகிறது. 

– பலர் வாழ்க்கை ஆலோசனைக்காக AI ஐப் பயன்படுத்துவதற்கு இதுவும் ஒரு காரணமாக இருக்கலாம்.

– பெரும்பாலும் அதை ஒரு மனநல சிகிச்சையாளராகப் பலர் பயன்படுத்துகிறார்கள்.

– “இப்படிப்பட்ட தெரபிகளின் ஒரு அமர்வுக்கு சுமார் ரூ. 1500 முதல் 2000 வரை செலவாகும். நான் ஒரு மாணவன். எனக்கு இது கட்டுப்படி ஆகாது. ஆகையால், AI -ஐ நாடினேன். இது எனது உணர்ச்சி சுமையை சமாளிக்க உதவியது” என்று ஒரு மாணவர் தெரிவித்தார்.

மனநல நிபுணர்கள் AI-ஐ ஒரு கலவையான சிகிச்சையாகக் கருதுகின்றனர்

சிகிச்சையாளர்களும் மனநல மருத்துவர்களும் உணர்ச்சிகளையும் உணர்வுகளையும் செயலாக்க AI-ஐ ஒரு கலவையான சிகிச்சையாகக் கருதுகின்றனர்.

“சிகிச்சைக்காக AI-ஐப் பயன்படுத்துவது உங்கள் தனியுரிமையை ஆபத்தில் ஆழ்த்துவது மட்டுமல்லாமல், நீங்கள் ஒரு இயந்திரத்துடன் ஆழ்ந்த தனிப்பட்ட தகவல்களைப் பகிர்ந்து கொள்வதால், சிகிச்சையாளர்கள், மாணவர்கள் மற்றும் மனநல நிபுணர்கள் செய்யும் கடுமையான பயிற்சி, கல்வி மற்றும் நெறிமுறைப் பொறுப்பையும் இது குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது. அணுகக்கூடிய ஆதரவு முக்கியமானது, ஆனால் உண்மையான சிகிச்சையில் என்னென்ன அதிகமாக இருக்கும் என்பதை அங்கீகரிப்பதும் முக்கியம், ” என்று மனநல மருத்துவர் மான்சி போடார் கூறுகிறார்.

“சிகிச்சை என்பது நல்லுறவை உருவாக்குவதும், பின்னர் உணர்ச்சிபூர்வமான ஆதரவை வழங்குவதும், பின்னர் அனைத்துப் பிரச்சினையிலும் நபரை வழிநடத்துவதும் ஆகும். AI-யால் அதைச் செய்ய முடியுமா என்று நான் சந்தேகிக்கிறேன். ஆனால் எதிர்காலத்தில், முன்னேற்றங்களுடன் AI மனிதர்களுடன் உணர்ச்சி ரீதியாக இணையக்கூடும்” என்று திருவனந்தபுரத்தில் பயிற்சி பெறும் மனநல மருத்துவர் டாக்டர் சுபாஷ் கூறுகிறார்.

AI ஒரு சிகிச்சையாளரின் உதவிக்கரமாக இருக்கலாம்

நிபுணர்கள் AI-ஐ மனித தெரபிஸ்டுகளுக்கு பொருத்தமான மாற்றாகக் கருதவில்லை என்றாலும், சிகிச்சை செயல்முறைக்கு உதவும் ஒரு கருவியாக இதைப் பயன்படுத்தலாம் என்பதை அவர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

“சாட்போட்களுடன் மக்கள் பகிர்ந்து கொள்ளும் உள்ளீடுகளை பகுப்பாய்வு செய்வதன் மூலம், சிகிச்சையிலிருந்து தனிநபர்கள் என்ன தேடுகிறார்கள் என்பது பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளைப் பெறலாம். இந்தத் தரவு ஒட்டுமொத்த மனநல சேவைகளை மேம்படுத்துவதற்கான பயனுள்ள ஆதாரமாகச் செயல்படும்,” என்று மான்சி போடார் கூறுகிறார்.

எச்சரிக்கை தேவை

செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, அனைத்து துறைகளிலும் இன்றியமையாதது. ஆனால், நம்மை நாம் இயந்திரங்களிடம் எந்த அளவிற்கு வெளிக்காட்டிக்கொள்வது நல்லது என்பதை நாம் யோசிக்க வேண்டும். கவலைக்கு மருந்தாக உயிருள்ள மனிதர்கள் இருக்கையில், AI இடம் ஆறுதல் தேட நினைப்பது கிணற்றை விட்டு காணல் நீரைத் தேடி ஓடுவது போலாகிவிடும் அல்லவா?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.