லக்னோ,
வட மாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் சிவ பக்தர்கள் ‘கன்வார்’ யாத்திரை மேற்கொள்கின்றனர். இந்த யாத்திரையை மேற்கொள்பவர்கள் ‘கன்வாரியாக்கள்’ என்று அழைக்கப்படுகின்றனர். இந்த யாத்திரையின்போது ஹரித்வார், கங்கோத்ரி உள்ளிட்ட புனித தலங்களுக்குச் சென்று கங்கை நீரை எடுத்து வருவார்கள். பின்னர் அந்த புனித நீரைக் கொண்டு தங்கள் ஊர்களில் உள்ள சிவன் கோவில்களில் அபிஷேகம் செய்வார்கள்
இந்த நிலையில் யாத்திரை சென்ற கன்வாரியாக்கள் சிலர் ஒரு சி.ஆர்.பி.எப். வீரரை தாக்கும் காட்சி இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. உத்தரபிரதேசம் மிர்சாபூரில் உள்ள ரெயில் நிலையத்தில் சி.ஆர்.பி.எப். வீரர் பிரம்மபுத்ரா எக்ஸ்பிரஸ் ரெயிலைப் பிடிக்க டிக்கெட் எடுக்கப் போனதாகக் கூறப்பட்டது. இந்த நேரத்தில், ஏதோ ஒரு விஷயத்தில் கன்வாரியாக்களுடன் வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்திற்கு மேல் முற்றிய நிலையில் கன்வாரியாக்கள் சிலர் அந்த ராணுவ வீரரை சரமாரியாக தாக்கினர்.
இந்த தாக்குதலை அங்கிருந்த நபர் ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளார். மேலும் சி.ஆர்.பி.எப். வீரரை கன்வாரியாக்கள் தாக்கும்போது அங்கிருந்த மக்கள் யாரும் தடுக்க முன்வரவில்லை. இந்த தாக்குதல் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்த மோதல் குறித்து தகவலறிந்த ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். தாக்குதலில் ஈடுபட்ட 7 கன்வாரியாக்களை 7 பேரை கைது செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்தி வருகின்றனர்.