தமிழகத்தில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டுக்காக ரூ.21.47 கோடி அபராதம்: ஐகோர்ட்டில் அரசு தகவல்

சென்னை: பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின், தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 23 ஆயிரத்து 567 சோதனைகள் நடத்தப்பட்டு, 21 கோடியே 47 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக, தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து பிறப்பித்த அரசாணையை ஊட்டி, கொடைக்கானல் போன்ற மலைப்பகுதிகளில் முழுமையாக அமல்படுத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில், ஊட்டியில் கடந்த மே மாதம் நடந்த நாய் கண்காட்சியில் பெட் பாட்டில்கள் பயன்படுத்தப்பட்டதாகக் கூறி மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இது சம்பந்தமான வழக்கு, நீதிபதிகள் என்.சதீஷ்குமார் மற்றும் டி.பரத சக்கரவர்த்தி அடங்கிய சிறப்பு அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீலகிரி மாவட்ட நிர்வாகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், கண்காட்சிக்காக நாய்களை அழைத்து வந்த வாகனங்களில் பெட் பாட்டில்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. இதை கண்டுபிடித்த பின், நாய் கண்காட்சியில் பெட் பாட்டில்கள் பயன்படுத்திய தனிநபர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.

மேலும், நீலகிரியில் அரசு மற்றும் தனியார் நிகழ்ச்சிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படவில்லை என்பதை உறுதி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையில், பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து 2019 ஆம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்ட பின், தமிழகம் முழுவதும் 17 லட்சத்து 23 ஆயிரத்து 567 சோதனைகள் நடத்தப்பட்டு, 2 ஆயிரத்து 586 டன் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 21 கோடியே 47 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அமைந்துள்ள கோவை, நீலகிரி, நெல்லை, குமரி உள்ளிட்ட 13 மாவட்டங்களில், 636 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு, 7 கோடியே 12 லட்சம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதேபோல தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்த 261 தொழிற்சாலைகள் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், அதில் 176 தொழிற்சாலைகள் மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள 13 மாவட்டங்களில் இயங்கி வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரு அறிக்கைகளையும் பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள மாவட்டங்களில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட 636 டன் பிளாஸ்டிக் பொருட்கள் எப்படி அப்புறப்படுத்தப்பட உள்ளது என்பது குறித்தும், மூடப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் தொழிற்சாலைகள் குறித்தும் விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை ஆகஸ்ட் 1 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.