புதுடெல்லி,
சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பப்படும் மசோதாக்களை கிடப்பில் போடுவதாக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்குதொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாநில அரசுகள் சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்கள் மீது குறிப்பிட்ட காலத்துக்குள் முடிவு எடுக்க வேண்டும் என்று கவர்னர்களுக்கும், ஜனாதிபதிக்கும் நீதிபதிகள் காலக்கெடு விதித்தனர்.
அதாவது,மாநில அரசின் மசோதா குறித்து ஒரு மாதத்துக்குள் ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும். மாநில ஆளுநர்கள் அனுப்பும் மசோதாக்கள் குறித்து 3 மாதங்களுக்குள் குடியரசுத் தலைவர் முடிவு எடுக்க வேண்டும். ஒருவேளை, தாமதம் ஏற்பட்டால் அதற்கான காரணத்தை தெளிவுபடுத்த வேண்டும்’ என்று தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அரசியல்சாசனத்தின் 143(1) பிரிவின் கீழ் உள்ள சிறப்பு அதிகாரத்தை ஜனாதிபதி நீதிமன்றத்திடம் சில விளக்கங்களை கேட்டுள்ளார். இதன்படி, கவர்னருக்கும் ஜனாதிபதிக்கும் காலக்கெடு விதித்தது தொடர்பாக 14 கேள்விகளை ஜனாதிபதி கேட்டு இருந்தார்.
அரசியல் சாசனத்தில் ஜனாதிபதியின் செயல்பாடுகளுக்கு காலக்கெடு நிர்ணயிக்காத நிலையில், கோர்ட் அவ்வாறு நிர்ணயிக்க முடியுமா? என்பது உள்ளிட்ட 14 கேள்விகள் இடம் பெற்று இருந்தன. ஜனாதிபதி விளக்கம் கேட்ட நிலையில், இது குறித்த வரும் 22ம் தேதி சுப்ரீம் கோர்ட், விசாரணைக்கு எடுக்கிறது. தலைமை நீதிபதி கவாய், நீதிபதிகள் சூர்ய காந்த், விக்ரம்நாத், பிஎஸ் நரஷிம்மா மற்றும் ஏஎஸ் சந்துர்கர் அமர்வு இதனை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உள்ளது.