2026 சட்டப்பேரவை தேர்தலுக்காக தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, இப்போது தவெக தலைவர் விஜய்யையும் கூட்டணிக்குள் கொண்டுவர வலைவீசியுள்ளார். அப்படியே சீமானுக்கும் சிக்னல் காட்டியுள்ளார்.
இப்போதைய நிலையில் திமுக கூட்டணி கிட்டத்திட்ட உறுதியாகிவிட்டது. காங்கிரஸ், விசிக, இடதுசாரிகள், மதிமுக, மமக, ஐயுஎம்எல், கொமதேக என அந்தக் கூட்டணி கட்சிகள் திமுகவோடு பயணிக்க தயாராகிவிட்டன. ஆனால், ஆளும் திமுகவை எதிர்க்கும் கட்சிகள் மூன்று அணியாக சிதறிக்கிடக்கின்றன. அதில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக கூட்டணியில் தற்போது பாஜக, தமாகா மட்டுமே இடம்பெற்றுள்ளன. அடுத்து விஜய்யின் தவெக மற்றும் சீமானின் நாதக கட்சிகள் தனித்தனியாக போட்டியிட முடிவெடுத்துள்ளன. எனவே இப்போதைய சூழலில் திமுகவை எதிர்த்து 3 அணிகள் களமிறங்குகின்றன.
ஆளும் திமுக அணிக்கான வாக்குகள் ஒன்றாக திரளும்போது, திமுகவுக்கு எதிரான வாக்குகள் மூன்றாக சிதறுவது தங்களின் வெற்றிக் கனவை சிதைக்கும் என அச்சப்பட தொடங்கியுள்ளது அதிமுக. இதனால்தான் இப்போது விஜய்க்கும் தூண்டில் வீச ஆரம்பித்துள்ளார் இபிஎஸ்.
சமீபத்தில் ஒரு செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த எடப்பாடி பழனிசாமி, விஜய்யோடு கூட்டணி குறித்து பாசிட்டிவாக பேசினார். அதேபோல திமுகவை எதிர்க்கும் சீமான் ஓரணியில் வரவேண்டும் என்றும் தன் விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். இது விஜய், சீமானை கூட்டணிக்குள் வரவேற்க இபிஎஸ் தயாராகிவிட்டதை காட்டுகிறது.
சில நாட்களுக்கு முன்பு ‘ஒரு பிரம்மாண்டமான கட்சி’ எங்கள் கூட்டணிக்குள் வருகிறது என்றார் இபிஎஸ். அந்த பிரம்மாண்ட கட்சி தவெகதானோ என்ற சந்தேகம் வலுக்க ஆரம்பித்துவிட்டது. தவெகவுடன் அதிமுக கூட்டணி வைக்கப் போகிறது என்ற பேச்சு படபடத்த நிலையில், உடனடியாக ‘நிரந்தர எதிரியான பாஜகவுடன் கூட்டணியில் உள்ள எந்த கட்சியுடனும் சேரமாட்டோம்’ என அறிக்கை விட்டுள்ளது தவெக.
ஆனாலும், பாஜக, திமுகவை கடுமையாக விமர்சித்து வரும் தவெக தரப்பு, இப்போதுவரை ஒரு வார்த்தை கூட அதிமுகவை விமர்சிக்கவில்லை. இதன் மூலமாக அதிமுகவை தனது நட்பு சக்தியாகவே தவெக பார்க்கிறது என்று புரிந்துகொள்ளலாம்.
இருப்பினும், அதிமுக அணியில் தவெக இடம்பெறுவதற்கு தடையாக இருப்பது பாஜகதான். ஒருவேளை பாஜகவோடு அதிமுக கூட்டணி உறுதியாகாவிட்டால், இந்நேரம் அதிமுக – தவெக கூட்டணி அமைந்திருக்கும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். இதனை உணர்ந்தே பாஜக தடாலடியாக அதிமுகவை கூட்டணியில் சேர்த்தது எனவும் சொல்கின்றனர்.
உண்மையாக, தவெகவை கூட்டணிக்குள் கொண்டுவருவதுதான் இபிஎஸ்சின் நோக்கமா அல்லது ‘கூட்டணி ஆட்சி’ என தொடர்ந்து குட்டையை குழப்பி வரும் பாஜகவுக்கு ‘செக்’ வைக்கும் விதமாக இந்த ரூட்டை அவர் எடுத்துள்ளாரா என்ற கேள்வியும் எழுகிறது.
கூட்டணி ஆட்சி, 50-க்கும் மேற்பட்ட தொகுதிகள் பாஜக தலைவர்கள் இப்போதே குடைச்சல் கொடுக்க ஆரம்பித்து விட்டார்கள். எனவே, என் கையில் இன்னொரு ஆப்ஷனும் இருக்கிறது எனக் காட்டவே, விஜய்க்கு அழைப்பு விடுத்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி என்கிறார்கள்.
‘தேர்தல் நேரத்தில் எல்லாம் சாத்தியம்’ என்ற ஃபார்முலாவோடு, அதிகம் குடைச்சல் கொடுக்கும் பாஜகவை கழட்டிவிட்டு தவெக, நாதக கூட்டணியை உருவாக்கும் ‘பிளான்-பி’யை இப்போதே கையில் எடுத்துவிட்டார் இபிஎஸ். இது தவெகவுக்கான அழைப்பு மணி என்பதைவிட, பாஜகவுக்கான எச்சரிக்கை மணி என்பதே உண்மை.
அதேபோல, சீமானும் ‘திராவிட கட்சிகள், தேசிய கட்சிகளோடு அறவே கூட்டணி இல்லை’ எனச் சொல்லி வருகிறார். இதனால் அவரும் அதிமுகவோடு கூட்டணி வைக்க வாய்ப்பில்லை என்றே சொல்லப்படுகிறது. ஆனாலும், திமுகவை விமர்சிப்பதை போல அதிமுகவை சீமான் விமர்சிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் தொடர்ந்து வைக்கப்படுகிறது.
சீமானுக்கு அதிமுக மீது ஒரு ‘சாஃப்ட் கார்னர்’ உண்டு என்று திமுக தரப்பே அடிக்கடி விமர்சித்து வருகிறது. ஒருவேளை, பாஜக கூட்டணியில் இல்லாதபட்சத்தில் அதிமுகவோடு சீமான் சேருவதற்கு ஓரளவு வாய்ப்பு உள்ளது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
1996-ல் அதிமுக ஆட்சியை அகற்ற ரஜினியோடு கைகோத்தார் கருணாநிதி. அதேபோல 2011-ல் திமுக ஆட்சியை அகற்ற, தன் பிடிவாதத்தை தளர்த்தி விஜயகாந்தோடு கூட்டணி அமைத்தார் ஜெயலலிதா. இப்படி கடந்த கால வரலாறுகளை கணக்குப்போட்டுதான், விஜய்யோடு சேர ஆயத்தமாகிறார் இபிஎஸ். அதற்கு காலமும், கூட்டணி கணக்குகளும், முக்கியமாக பாஜகவும் வாய்ப்பை உருவாக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.