கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு குறித்து விரைவில் தேசிய கருத்தரங்குகள்: தங்கம் தென்னரசு

மதுரை: தொல்லியல் கழகம், பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் தொல்லியல் கழகத்தின் 33-வது ஆண்டுக் கருத்தரங்கம், 35-வது ஆவணம் இதழ் மற்றும் கல்வெட்டு அறிஞர் ராசகோபால் பவளவிழா மலர் திசையாயிரம் நூல் வெளியீட்டு விழா மதுரை காமராஜர் சாலையிலுள்ள தனியார் மஹாலில் நடந்தது. நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பங்கேற்று திசையாயிரம் நூலை வெளியிட்டார்.

விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது: “தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை ஏதாவது ஒரு பட்ஜெட்டில் ஒரு துண்டு விழுந்தால் உடனே கை வைக்கும் துறை தொல்லியல் தான் என ஒரு காலத்தில் இருந்தது. இந்த உண்மை பலருக்கும் தெரியும். அந்த காலம் மாறி நிதி அமைச்சராகவும், தொல்லியல் அமைச்சராகவும் இருக்கும் காரணத்தினால் நான் இந்த நிகழ்வில் நேரத்தை வேண்டுமானாலும் குறைப்பேனே தவிர, இத்துறையில் நிதி ஒதுக்கீட்டை குறைக்காத நிதி அமைச்சராக இருப்பேன் என்ற உறுதிமொழியை தெரிவிக்க விரும்புகிறேன்.

4 ஆண்டுகளில் இத்துறையில் மாபெறும் மறுமலர்ச்சி உருவாகியிருக்கிறது. அந்த மறுமலர்ச்சி அரசாங்கம் மேற்கொண்டு இருக்கக்கூடிய அகழாய்வு அருங்காட்சியத்தால் மட்டுமே உருவாகியதாக கருதிடமாட்டேன். தொல்லியல்துறை மீதான ஆர்வம், புதிய வடிவமைப்புகளை வெளியில் கொண்டுவர வேண்டும் என்ற எண்ணம், அதை ஆவணப்படுத்த வேண்டும் என்ற முயற்சி ஆகியவை இளைய சமுதாயத்திடம் ஏற்பட்டிருக்கிறது.

அகழாய்வுக்கென ஓராண்டுக்கு ரூ. 5 கோடி கொடுத்துக் கொண்டு வந்தோம். தற்போது, ரூ.7 கோடி கொடுக்க முயற்சி எடுத்திருக்கிறோம். அகழாய்வு முழு நேர பணி அல்ல. அகழாய்வுக்கு இணையான முக்கியத்துவம் கல்வெட்டுகளுக்கும் கொடுக்கவேண்டும். அருங்காட்சியங்களுக்கும் நாணயங்கள் துறைகளுக்கும் தரவேண்டும். பல்வேறு கல்வெட்டுகளை ஆவணப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியுள்ளது.

தமிழ்நாட்டில் கல்வெட்டுகளை கண்டுபிடிப்பதில் நாம் அடைந்திருக்கும் உயரம் அனைவருக்கும் தெரியும் வகையில் ரூ.30 கோடி செலவில் தேசிய கருத்தரங்கள் தமிழ்நாட்டில் மிக விரைவில் நடத்த இருக்கிறோம். பல இடங்களில் மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளை கண்டுபிடிக்கின்றனர், பானை ஓவியங்கள், சிதறி கிடக்கும் சிற்பங்களை கண்டுபிடிக்கின்றனர். அதில் கிடைக்கும் கல்வெட்டுகளை கொண்டு வருகின்றனர். மடைகள், கண்மாய்களை போய் பார்க்கின்றனர். இவற்றையெல்லாம் ஆவணத்தில் பதிவிடுகிறோம்.

தமிழ்நாடு அரசின் இம்முயற்சியை ஊக்கப்படுத்த வேண்டும். உலக தமிழ் சங்கத்தில் கல்வெட்டுக்கள் என்றே தனியாக ஒரு அருங்காட்சியகம், அமைக்கவேண்டும். இப்போதைய சூழலில் பல்வேறு கல்வெட்டுக்கள் எப்படி எழுத்துக்கள் முறை மாறி இருப்பது என்பதை எல்லாம் இன்றைய சூழலில் விளக்கும் அளவில் தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சிறப்பான அருங்காட்சியம் உலக தமிழ் சங்கத்தில் உருவாக்க அறிவிக்கப்பட்டுள்ளது. அகழாய்வுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் அதில் இருக்கும் பிற துறைகளுக்கும் கொடுக்கவேண்டும். இக் கோரிக்கைகள் நீண்ட நாளாக இருக்கிறது” இவ்வாறு அமைச்சர் பேசினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.