நாகை: “ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல என்று எடப்பாடி பழனிசாமி பேசியதில் எந்த உள்நோக்கமும் இல்லை. தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தமிழகத்தில் அமையும்” என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் கூறினார்.
நாகை மாவட்டம் உத்தமசோழபுரத்தில் வெட்டாற்றின் குறுக்கே கட்டப்படும் தடுப்பணை பணியை நிறுத்திவிட்டு, ஏற்கெனவே அறிவித்த பூதங்குடி பகுதியில் தடுப்பணை கட்ட நடவடிக்கை எடுக்கக் கோரி பாஜக சார்பில் வாஞ்சூரில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றுப் பேசிய பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது, ‘ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஏமாளிகள் அல்ல’ என அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி பேசியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, “அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டார்கள், பாஜகவினர் அதிமுகவை கபளீகரம் செய்துவிடுவார்கள் என திமுகவினர் கூறியதற்குதான், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவ்வாறு பதில் அளித்துள்ளார். அதில் எந்தவித உள்நோக்கமும் இல்லை.
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி தமிழகத்தில் அமையும். எந்தக் கட்சியின் ஆட்சி அமையும் என்பதை அப்போது அறிந்துகொள்ளலாம். 2026 தேர்தலில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் என்பது குறித்து ஊடகங்கள் கவலைப்பட வேண்டாம்” என்றார்.
பழனிசாமி பேசியது என்ன? – ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தின் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் சனிக்கிழமை இரவு பொதுமக்களிடையே எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “பாஜக, அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால், பாஜகவினர் ஆட்சியில் பங்கு கேட்பார்கள் என்று ஸ்டாலின் கூறுகிறார். ஆட்சியில் பங்கு கொடுக்க நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல. எங்களுக்கு கூட்டணி வேண்டும் என்றால் வேண்டும். வேண்டாம் என்றால் வேண்டாம். எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டோம்.
வாரிசுகள் ஆட்சிக்கு வரவேண்டும் என்று நாங்கள் துடிக்கவில்லை. நாங்கள் ஆட்சிக்கு வரவேண்டும் என மக்கள் விரும்புகிறார்கள். எங்களுடைய நோக்கம் திமுக ஆட்சியை அகற்றுவதுதான். அதற்காக, எங்களுடன் பயணிக்கும் கட்சிகளை இணைத்து கூட்டணி அமைத்துள்ளோம். அந்த வகையில்தான் பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். இந்தக் கூட்டணியில் இன்னும் சில கட்சிகள் இணைய உள்ளன” என்று பழனிசாமி பேசியது குறிப்பிடத்தக்கது.