தொடர் தோல்வி! ஈகோவை விட்டு சிஎஸ்கே வீரரை அழைத்த கவுதம் கம்பீர்!

இந்திய அணி தற்போது 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்த இங்கிலாந்து தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள நிலையில், நான்காவது டெஸ்ட் போட்டிக்கு முன்பு பெரும் சவாலை எதிர்கொண்டுள்ளது. இளம் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் பயிற்சியின் போது கையில் வெட்டுக்காயம் ஏற்பட்டதால், அவர் அடுத்த போட்டியில் விளையாடுவது சந்தேகமாகியுள்ளது. இதனால், பிசிசிஐ ஹரியானா வீரர் அன்ஷுல் கம்போஜை அணியில் சேர்த்துள்ளது. 24 வயதான இந்த இளம் பந்து வீச்சாளர், மான்செஸ்டர் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் ஜூலை 23 முதல் நடைபெறும் போட்டிக்கு மாற்று வீரராக இணைந்துள்ளார். இது இந்திய அணியின் பந்து வீச்சு வரிசையை வலுப்படுத்தும் முயற்சியாக இந்த இனணப்பு பார்க்கப்படுகிறது.

மேலும் படிங்க: அதிரடி வீரரை கழட்டிவிடும் CSK… கொத்தித் தூக்கப்போகும் இந்த 3 அணிகள்!

அர்ஷ்தீப் சிங் காயம்

அர்ஷ்தீப் சிங், இந்தத் தொடரில் இன்னும் ஒரு டெஸ்டில் கூட அறிமுகம் ஆகவில்லை என்றாலும், அவர் இடது கை வேகப்பந்து வீச்சாளராக இங்கிலாந்து நிலைமைகளுக்கு ஏற்றவராக கருதப்பட்டார். பயிற்சி அமர்வில் சாய் சுதர்சனின் ஷாட்டை தடுக்க முயன்றபோது அவரது கையில் காயம் ஏற்பட்டது. இதற்கு தையல் போடப்பட்டுள்ளதால், அவர் குறைந்தது 10 நாட்கள் ஓய்வு எடுக்க வேண்டியிருக்கும். இது குறித்து உதவி பயிற்சியாளர் ரயான் டென் டோஷேட் கூறுகையில், “இது வெறும் வெட்டுக்காயம் தான், ஆனால் அதன் தீவிரத்தைப் பொறுத்து எங்கள் திட்டங்கள் மாறும்” என்று கூறியுள்ளார். இதனால், அர்ஷ்தீப்பின் இடத்தை நிரப்ப அன்ஷுல் கம்போஜ் அழைக்கப்பட்டுள்ளார்.

அன்ஷுல் கம்போஜின் சாதனைகள்

அன்ஷுல் கம்போஜ் இந்தியா ஏ அணியில் சமீபத்தில் இங்கிலாந்து லயன்ஸ் அணிக்கு எதிரான விளையாடி, 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரஞ்சி டிராபியில் கேரளாவுக்கு எதிரான போட்டியில் ஒரு இன்னிங்ஸில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தார். மேலும் ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 8 போட்டிகளில் 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார், அவரது எகானமி ரேட் 8.00 ஆக உள்ளது. முதல் தர போட்டிகளில் 24 ஆட்டங்களில் 79 விக்கெட்டுகளை எடுத்துள்ள அன்ஷுல், டெஸ்ட் அறிமுகத்துக்காக காத்திருக்கிறார். இந்தியா ஏ அணியில் அவர் காட்டிய செயல்திறன், அவரை இந்த அழைப்புக்கு தகுதியானவராக்கியுள்ளது. ஹரியானா அணிக்காக விஜய் ஹசாரே டிராபியில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியை வெற்றி பெற வைத்தார்.

இந்திய அணியின் சவால்கள்

இந்திய அணி இங்கிலாந்து தொடரில் 1-2 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. லார்ட்ஸ் போட்டியில் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது அணியை அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. இதனுடன், ஆகாஷ் தீப் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் லார்ட்ஸ் போட்டியின் போது வலியுடன் விளையாடினார், இதனால் அவரது பங்கேற்பும் சந்தேகமாகி உள்ளது. ஜஸ்பிரிட் பும்ரா இந்தத் தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்ற திட்டத்தின்படி, அவர் நான்காவது போட்டியில் ஓய்வு எடுக்கலாம். இதனால், அன்ஷுல் கம்போஜ் அல்லது ஷார்துல் தாகூர், பிரசித் கிருஷ்ணா போன்றவர்களில் ஒருவர் வாய்ப்பு பெறலாம். ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் இந்தியா கடந்த 89 ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் போட்டியிலும் வென்றதில்லை, இது கூடுதல் சவால். கேப்டன் ஷுப்மன் கில் தலைமையிலான அணி, இந்த சவால்களை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. அன்ஷுல் கம்போஜின் வருகை, அணியின் பந்து வீச்சு வலிமையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிங்க: இந்திய அணிக்குள் வரும் வெறித்தனமான சிஎஸ்கே பௌலர்… அர்ஷ்தீப் சிங் அவுட்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.