புதுவை கடற்கரை ரோந்து பணியில் முதல்முறையாக ரோபோ!

புதுச்சேரி: புதுச்சேரி கடற்கரையில் போலீஸாருக்கு உதவியாக முதல்முறையாக ரோந்து பணியில் விரைவில் ரோபோ ஈடுபடுத்தப்படவுள்ளது. அதிகாரிகள் முன்னிலையில் செயல்விளக்கம் நடந்த நிலையில், குறைகளை களைந்தபின் நடைமுறைக்கு வரவுள்ளது.

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானோர் விருப்பத்துடன் இளைப்பாறுவது கடற்கரைதான். வெளியூர் மக்கள் மட்டுமின்றி உள்ளூர் மக்களும் தங்கள் நேரத்தை செலவிட கடற்கரைச் சாலைக்குதான் முன்னுரிமை தருவர். காலை தொடங்கி இரவு வரை பலரும் தங்களுக்கு பிடித்த இடமாக கடற்கரைச் சாலையை கருதுகின்றனர்.

சுமார் 2 கி.மீ நீளமுள்ள கடற்கரை சாலையில் பெரியகடை போலீஸார் ரோந்து செல்கின்றனர். இந்த நிலையில் போலீசாருக்கு உதவியாக நவீன ரோபோ ரோந்து பணியில் ஈடுபடுத்த காவல்துறை தலைமையகம் முடிவு செய்துள்ளது. சென்னை தனியார் நிறுவனத்துடன் இணைந்து ரோபோ உருவாக்கப்பட்டு வருகிறது. இதன் செயல்விளக்கம் கடற்கரை சாலையில் நடந்தது. டிஐஜி சத்தியசுந்தரம், சீனியர் எஸ்பிக்கள் கலைவாணன், நித்யா ராமகிருஷ்ணன், ஏ.கே.லால் முன்னிலையில் ரோபோ செயல்விளக்கம் தரப்பட்டது.

இந்த ரோபோவில் நவீன கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ரோபோ தானாகவே சென்று கண்காணிக்கும். கடற்கரையில் குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள், மது அருந்துபவர்கள், தடையை மீறி குளிப்பவர்களை படம் பிடித்து கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்தியாவில் முதல்முறையாக புதுவையில் ரோந்து பணிக்கு ரோபோ பயன்படுத்தப்பட உள்ளதாக தனியார் நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இதில் உள்ள குறைபாடுகள் களையப்பட்ட பின் ரோபோ ரோந்து பணி நடைமுறைக்கு வர உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.