லக்னோ: சமூக விரோதிகள் காவி உடையில் ஊடுருவி கன்வர் யாத்ரீகர்களின் புகழை கெடுக்க முயற்சிகள் நடைபெறுகின்றன என உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் குற்றம் சாட்டியுள்ளார். உத்தர பிரதேச மாநிலத்தில் கன்வர் யாத்திரை பலத்த பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், மிர்சாபூர் ரயில் நிலையத்தில் டிக்கெட் வாங்குவதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையைச் சேர்ந்த வீரர் ஒருவருக்கும், கன்வர் யாத்திரை மேற்கொள்ளும் பக்தர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் சிஆர்பிஎப் வீரரை தாக்கிய 3 கன்வர் யாத்ரீகர்கள் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் உ.பி.யில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றில் பங்கேற்ற மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியதாவது: உற்சாகம் எங்குள்ளதோ, அங்குதான் நம்பிக்கையும், பக்தியும் இருக்கும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும்.
அந்த உற்சாகத்தை கெடுக்கவும், பக்தி மற்றும் நம்பிக்கைக்கு அவப் பெயர் ஏற்படுத்தவும் சில சமூக விரோதிகள் தொடர்ந்து முயற்சிக்கின்றனர். காவி உடையணிந்த கன்வர் யாத்ரீகர்கள் சாலைகளிலும், ஓட்டல்களிலும் வன்முறையில் ஈடுபடுவது போன்ற வீடியோக்கள் சமூக ஊடகங்களில் நிறைந்து காணப்படுகின்றன.
சமூக விரோதிகள், கன்வர் யாத்திரையில் ஊடுருவி அவப் பெயரை ஏற்படுத்துகின்றனர். அவர்களை கன்வர் யாத்ரீகர்கள் அடையாளம் காட்ட வேண்டும். அவர்களிடமிருந்து விலகிச் செல்லுங்கள். உங்கள் குழுவில் அவர்கள் நுழைவதை அனுமதிக்காதீர்கள். இது குறித்து நிர்வாகத்திடம் உடனடியாக தெரியப்படுத்துங்கள். இவ்வாறு முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.