யமுனா நகர்: லவ் ஜிகாத் நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்து என கூறிய யமுனா நகர் நீதிமன்றம், இதற்கு வற்புறுத்திய நபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஹரியானா மாநிலத்தில் உள்ள யமுனா நகரைச் சேர்ந்த 14 வயது சிறுமி காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புகார் அளித்தார்.
அதில் பள்ளிக்கு செல்லும் போது முஸ்லிம் இளைஞர் ஒருவர் பின்தொடர்ந்து வருவதாகவும், அவருடன் நட்பாக பழகும்படி ஷாபாஜ் என்பவர் வற்புறுத்துகிறார் என கூறினார். இதன் அடிப்படையில் ஷாபாஜ் மீது குற்ற சதி, போக்சோ சட்டத்தின் கீழ் பாலியல் தொந்தரவு உட்பட பல பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த யமுனாநகர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பில் கூறியதாவது: மைனர் இந்துச் சிறுமியை, முஸ்லிம் இளைஞரிடம் நட்பாக பழகும்படி வற்புறுத்துவதும் ‘லவ் ஜிகாத்’தில் ஒன்று. இதுபோன்ற செயல்கள் நாட்டின் ஒற்றுமைக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.
இந்த குற்றத்துக்காக சிறுமியை வற்புறுத்திய ஷாபாஜ்க்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதிக்கப்படுகிறது. இவ்வாறு யமுனாநகர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.