ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்கிறோம்: அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர்

அரியலூர்: கங்கைகொண்ட சோழபுரம் கோயில் எழுப்பிய ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்கிறோம் என போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியுள்ளார்.

அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தில் ஜூலை 23-ம் தேதி மாமன்னன் ராஜேந்திர சோழனின் ஆடி திருவாதிரை திருவிழா வெகு விமரிசையாக தமிழக அரசு சார்பில் கொண்டாடப்பட உள்ளது. விழாவையொட்டி, கங்கைகொண்ட சோழபுரத்தில் உள்ள அரசுப் பள்ளி வளாகத்தில் பந்தல் அமைக்கும் பணிகள் நடைபெறுவதை மாநில போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், ஆட்சியர் பொ.ரத்தினசாமி ஆகியோர் இன்று (ஜூலை 21) பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அப்போது, அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கூறியதாவது: ராஜேந்திர சோழனின் பிறந்த நாளான ஜூலை 23-ம் தேதி காலை மங்கள வாத்திய நிகழ்ச்சியுடன் விழா தொடங்குகிறது. விழாவில் நிதி மற்றும் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுற்றுலாத் துறை அமைச்சர் ரா.ராஜேந்திரன், இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, சிதம்பரம் மக்களவை உறுப்பினர் திருமாவளவன் மற்றும் நான் உள்ளிட்டோர் பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளோம்.

மேலும், கலை பண்பாட்டுத்துறை சார்பில் கலை நிகழ்ச்சிகளும், முனைவர் பர்வீன் சுல்தானா தலைமையில் சோழர்கள் புகழுக்கு பெரிதும் காரணம் – நிர்வாகத் திறனே! போர் வெற்றிகளை! என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெறுகிறது. மாலையில் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் மாமன்னர் ராஜேந்திர சோழனின் வரலாற்று நாடகமும், நையாண்டி மேளம், கரகாட்டம், மயிலாட்டம், கிராமிய பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகளை கலைஞர்கள் நடத்தவுள்ளனர்.

காட்டைத் திருத்தி நகர் புறங்கள் மற்றும் கிராமப் புறங்களை அமைத்து மக்கள் பயன்பெறும் வகையில் பொன்னேரி வெட்டி, பெருமை மிக்க கங்கைகொண்ட சோழபுரம் கோயில் எழுப்பிய மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு விழா எடுப்பதில் பெருமை கொள்கிறோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், “இரவு நேரங்களில் தொலைதூர அரசுப் பேருந்துகளில் பெயர் பலகையின் முகப்பு விளக்குகளை அனைத்து சில ஓட்டுநர்கள் செல்வதாக ஆய்வில் கண்டறியப்பட்டு, பெயர் பலகைகளை எரியும் வண்ணம் செல்ல போக்குவரத்து மேலாண் இயக்குநர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஆட்சியில் பங்கு தர நாங்கள் ஒன்றும் ஏமாளிகள் அல்ல என எடப்பாடி பழனிசாமியும், அண்ணாமலையும் கூறிவருவது அவர்களுக்குள் பங்கு பிரிப்பதில் என்ன பிரச்சினை வந்துள்ளது எனத் தெரியவில்லை. அதனால் இந்த நாடகத்தை துவக்கியிருக்கிறார்கள். நாடகம் உச்ச கட்டத்தை அடையும் பொழுது முடிவுகள் என்ன என தெரியவரும்.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.