வங்காளதேசத்தில் போர் விமானம் விபத்து: பலி எண்ணிக்கை 27 ஆக அதிகரிப்பு

டாக்கா,

வங்காளதேசத்தின் குர்மிடோலா என்ற இடத்தில் அந்த நாட்டின் விமானப்படை தளம் உள்ளது. இங்கு வழக்கமாக வீரர்கள் விமானத்தில் பயிற்சி மேற்கொள்வது வழக்கம். இதன்படி நேற்று பிற்பகல் 1 மணிக்கு எப்-7 பி.ஜி.ஐ. என்ற போர் விமானம் பயிற்சியில் ஈடுபட்டது. இதில் விமானி மற்றும் பயிற்சி வீரர்கள் இருந்தனர். இந்த விமானம் சீனாவின் தயாரிப்பாகும்.

விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது. தலைநகர் டாக்காவின் உத்தரா பகுதியில் உள்ள 2 மாடிகள் கொண்ட பள்ளிக்கூடம் மீது அந்த விமானம் விழுந்து நொறுங்கியது.

சிறிது நேரத்தில் அந்த விமானம் கொழுந்துவிட்டு எரிந்தது. இதில் அங்கு தேர்வு எழுதிக்கொண்டிருந்த மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதனை கேள்விப்பட்டதும் மாணவர்களின் பெற்றோர் பதறியடித்துக் கொண்டு அங்கு ஓடிச்சென்றனர். இந்த சம்பவத்தால் பள்ளி வளாகம் போர்க்களம் போல் காட்சி அளித்தது. இதனையடுத்து அங்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்தனர். இதற்காக ராணுவ ஹெலிகாப்டர்களும் அங்கு வரவழைக்கப்பட்டன. அவர்களது பல மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

மற்றொருபுறம் படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியும் துரிதமாக நடைபெற்றது. இந்தநிலையில், விமான விபத்தில் சிக்கி விமானி மற்றும் மாணவர்கள் உள்பட பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.

இதில் 25 பேர் குழந்தைகள் ஆவர். 170க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பள்ளி வளாகத்தில் ஏற்பட்ட இந்த விபத்து நாட்டையே உலுக்கியது. எனவே விபத்துக்கான காரணம் குறித்து விமான போக்குவரத்து துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.