இனி இந்த பிளேயருக்கு இந்திய டெஸ்ட் அணியில் வாய்ப்பு கிடைக்காது! முடிவுரை எழுதிய கவுதம் கம்பீர்

Karun Nair : இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்டு டிராப்போர்டு மைதானத்தில் நடக்கிறது. இப்போட்டியில் இந்தியஅணி பேட்டிங் செய்யும் நிலையில், ஒரு பிளேயரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்த அப்டேட்டும் வெளியாகியுள்ளது. ஏனென்றால் அந்த பிளேயர் 4வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை. முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளிலும் எதிர்பார்த்த அளவுக்கு பேட்டிங் ஆடாததால் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் அவரை அணியில் இருந்து நீக்கியுள்ளார். அவர் வேறு யாருமல்ல கருண் நாயர் தான். 

கருண் நாயர் அதிரடி நீக்கம்

கருண் நாயர் நீண்ட வருடங்களுக்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான இப்போது நடக்கும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் தான் இடம்பிடித்தார். இங்கிலாந்தில் நடைபெற்ற கவுன்டி போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் அவரை இந்திய அணிக்கு பிசிசிஐ தேர்வு செய்தது. அத்துடன் இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியின் பிளேயிங் லெவனிலும் சேர்க்கப்பட்டிருந்தார் கருண் நாயர், ஆனால், அவரிடம் எதிர்பார்த்தளவுக்கு பேட்டிங் வெளிப்படவில்லை. மிக மோசமான ஆட்டத்தையே ஆடினார். இருப்பினும், மூன்று டெஸ்ட் போட்டிக்கான அணியிலும் இந்திய அணி நிர்வாகம் வாய்ப்பு கொடுத்த நிலையில், அவரை 4வது டெஸ்ட் போட்டியில் அணியில்  இருந்து அதிரடியாக நீக்கியுள்ளது. 

கடைசி சர்வதேச டெஸ்ட் போட்டி

இதன்மூலம் அவருக்கான வாய்ப்பு இந்திய அணியில் முடிந்துவிட்டது என்றே சொல்லலாம். இனி கருண் நாயருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைப்பது மிக மிக கடினம். நீண்ட வருடங்களுக்குப் பிறகு அணியில் விளையாட கிடைத்த வாய்ப்பை அவர் பயன்படுத்திக் கொள்ளவில்லை. மிகப்பெரிய எதிர்பார்ப்பு கருண் நாயர் மீது  இருந்தது. ஆனால், அதை பூர்த்தி செய்யாமல் எல்லோருக்கும் ஏமாற்றத்தையே கொடுத்தார். ஒரு வாய்ப்பு, இரண்டு வாய்ப்புகள் அல்ல, மொத்தம் மூன்று வாய்ப்புகள் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அவருக்கு கொடுக்கப்பட்டது. மிகவும் முக்கியமான டெஸ்ட் தொடரில் கிடைத்த வாய்ப்பை கருண் நாயர் வீணடித்துவிட்டார். இதனால், லார்ட்ஸில் அவர் ஆடிய போட்டியே இந்திய அணிக்காக கருண் நாயர் விளையாடிய கடைசி சர்வதேச போட்டியாக இருக்க வாய்ப்புள்ளது. இன்னொரு வாய்ப்பு அவருக்கு பிசிசிஐ கொடுக்க வாய்ப்பில்லை.

கருண் நாயர் சர்வதேச கிரிக்கெட் பயணம்

கருண் நாயர் இந்திய அணிக்காக 2016 ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுகமானார். இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அறிமுகமான அவர், அதே தொடரில் ஒரு இன்னிங்ஸில் 303 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். அதன்பிறகு இந்திய அணிக்கு ஒருநாள் போட்டிக்கான அணியிலும் சேர்க்கப்பட்டார். சிறப்பான பேட்டிங் வெளிப்படுத்தியபோதும் அதன்பிறகு இந்திய அணியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சுமார் 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அவர், எதிர்பார்த்த அளவுக்கு விளையாடவில்லை. இதனால், கருண் நாயரின் இந்திய அணிக்கான சர்வதேச கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வர அதிக வாய்ப்புள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.