வெறித்தனத்திலும் பயங்கரவாதத்திலும் மூழ்கியுள்ள ஒரு நாடு பாகிஸ்தான் என்றும் அந்த நாடு சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொடர்ந்து கடன் வாங்கும் நாடு என்றும் ஐநா பாதுகாப்பு அவை கூட்டத்தில் இந்தியா குற்றம் சாட்டியது.
15 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பாதுகாப்பு அவையின் தற்போதைய தலைவராக பாகிஸ்தான் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐநா பாதுகாப்பு அவையில் நடைபெற்ற, ‘சர்ச்சைகளை அமைதியான முறையில் தீர்த்து வைப்பதன் மூலம் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பை ஊக்குவித்தல்’ எனும் தலைப்பில் நடைபெற்ற திறந்தவெளி கருத்தரங்கில், கூட்டத்துக்கு தலைமை வகித்து பாகிஸ்தான் துணைப் பிரதமர் இஷாக் தர் பேசினார்.
அப்போது அவர், ஜம்மு காஷ்மீர் குறித்தும், சிந்து நதி நீரை இந்தியா நிறுத்தியது குறித்தும் பேசினார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய ஐநாவுக்கான இந்திய நிரந்தர தூதர் பர்வதநேனி ஹரிஷ், “நாம் தற்போது சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பு குறித்து பேசுகிறோம். இதற்கு அனைவரும் ஏற்கத்தக்க, அங்கீகரிக்கத்தக்க அடிப்படை விதிகள் தேவை. சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்புக்கு பயங்கரவாதத்துக்கு எதிரான பூஜ்ஜிய சகிப்புத்தன்மை கொள்கை மிகவும் முக்கியம்.
இந்தியா என்றால், முன்னேற்றம், செழிப்பு, வளர்ச்சி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு நாடு என்ற செய்தியை உலகம் பெற்றிருக்கிறது. ஒரு முதிர்ந்த ஜனநாயகமாகவும், வளர்ந்து வரும் பொருளாதாரமாகவும், சமூகத்தின் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை வழங்கும் ஒரு நாடாகவும் இந்தியா தன்னை முன்னிறுத்துகிறது. மறுபுறம் இதற்கு நேர்மாறான தோற்றத்தை பாகிஸ்தான் கொண்டிருக்கிறது. வெறித்தனம், பயங்கரவாதம் ஆகியவற்றில் மூழ்கியுள்ள ஒரு நாடு பாகிஸ்தான். சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து தொடர்ந்து கடன் வாங்கும் நாடு அது. சமீபத்தில் சுமார் 1 பில்லியன் டாலர் கடன் வழங்க சர்வதேச நாணய நிதியம் ஒப்புக்கொண்டுள்ளது. இதன்மூலம், இதுவரை சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பாகிஸ்தான் பெற்றுள்ள கடன் 2.1 பில்லியன் டாலர்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பொறுப்பேற்ற தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட் அமைப்பு, பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர் இ தொய்பாவின் முன்னணி அமைப்பு. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை வளர்க்கும் நாடாகவும், சர்வதேச உறவுகளை மதிக்காத நாடாகவும் பாகிஸ்தான் உள்ளது. அதற்கான கடுமையான விலை அதற்கு விதிக்கப்பட வேண்டும்.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் ஏப்ரல் 22-ம் தேதி அப்பாவி சுற்றுலாப் பயணிகள் 26 பேரை கொலை செய்த அமைப்பு தி ரெசிஸ்டன்ஸ் ஃபிரண்ட். இந்த தாக்குதலை கண்டித்து ஏப்ரல் 25 அன்று, ஐநா பாதுகாப்பு அவை அறிக்கை வெளியிட்டது. அந்த அறிக்கையின் அடிப்படையில்தான், பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கியது.
ஐநா பாதுகாப்பு அவை அறிக்கையில், இந்த பயங்கரவாத தாக்குதலுக்குக் காரணமானவர்கள், அமைப்பாளர்கள், நிதி அளிப்பவர்கள் மற்றும் ஆதரவாளர்களை பொறுப்பேற்க வைத்து அவர்களை நீதியின் முன் நிறுத்த வேண்டியது அவசியம் என அறிக்கை கூறியது.
இந்தியா நடத்திய ஆபரேஷன் சிந்தூர் அளவிடப்பட்ட ஒரு நடவடிக்கை. மோதலை தீவிரப்படுத்தாத இயற்கையான தன்மையை கொண்ட நடவடிக்கை அது. அந்த நடவடிக்கை தனது இலக்கை அடைந்ததும், பாகிஸ்தானின் வேண்டுகோளின் பேரில் ராணுவ நடவடிக்கையை இந்தியா நிறுத்தியது” என தெரிவித்தார்.