இங்கிலாந்துக்கு இனி 95% வேளாண் பொருட்களை வரியின்றி ஏற்றுமதி செய்யலாம்: பியூஷ் கோயல்

புதுடெல்லி: 95% இந்திய வேளாண் பொருட்களும், 99% இந்திய கடல்சார் உணவுப் பொருட்களும் வரி இன்றி இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பை இந்தியா – இங்கிலாந்து இடையேயான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வழிவகை செய்கிறது என்று மத்திய வர்த்தக அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

இந்தியா – இங்கிலாந்து இடையே விரிவான பொருளாதார மற்றும் வர்த்தக ஒப்பந்தம் (CETA) என்ற பெயரிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானதை அடுத்து, இதனால் இந்தியாவுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து பியூஷ் கோயல் அறிக்கை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பதிவில், “இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதற்காக பிரதமர் நரேந்திர மோடி, இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மற்றும் இந்திய – இங்கிலாந்து மக்கள் ஆகியோருக்கு வாழ்த்துக்கள்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்திய ஏற்றுமதிகளில் சுமார் 99% வரி இல்லாமல இங்கிலாந்துக்கு ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும், உழைப்பு மிகுந்த இந்திய துறைகளுக்கு கிட்டத்தட்ட 23 பில்லியன் டாலர் மதிப்புக்கு வாய்ப்புகளை இது வழங்குகிறது. உள்ளடக்கிய மற்றும் பாலின-சமத்துவ வளர்ச்சிக்கான புதிய சகாப்தத்தை இந்த ஒப்பந்தம் குறிக்கிறது.

ஜவுளி, தோல், காலணிகள், ரத்தினங்கள், நகைகள், பொம்மைகள், கடல் பொருட்கள் சார்ந்த சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் கைவினைஞர்கள், நெசவாளர்கள், தினசரி கூலித் தொழிலாளர்கள் போன்றோர் செழிப்பின் புதிய கட்டத்துக்குள் அடியெடுத்து வைப்பார்கள். கிராமப்புற தறிகள் முதல் தொழில்நுட்ப ஆய்வகங்கள் வரையிலான தொழில்களுக்கு நிதி உதவி கிடைப்பதும், உலகளாவிய மதிப்புச் சங்கிலிகளில் ஆழமாக ஒருங்கிணைவதற்குமான வரலாற்றுச் சிறப்புமிக்க வாய்ப்புகளை இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வழங்கும்.

இந்த ஒப்பந்தம் விவசாயிகளுக்கு ஒரு பெரிய வெற்றியாகும். கிட்டத்தட்ட 95% வேளாண் பொருட்களை வரி இல்லாமல் ஏற்றுமதி செய்வதை இது உறுதி செய்கிறது. அதேபோல், மீனவர்கள் 99% கடல்சார் உணவுப் பொருட்களை வரி இல்லாமல் ஏற்றுமதி செய்ய முடியும் என்பதால், அவர்களும் இனி அதிக லாபத்தைப் பெறுவார்கள். இதனால் அவர்களின் வருமானம் அதிகரிக்கிறது.

இந்த ஒப்பந்தம் பொறியியல் உபகரணங்கள், மின்னணுப் பொருட்கள், மருந்து, ரசாயனங்கள், உணவு பதப்படுத்துதல் மற்றும் பிளாஸ்டிக் போன்ற உற்பத்தி சார்ந்த துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த ஒப்பந்தம் இந்திய நுகர்வோருக்கு போட்டி விலையில் உயர்தர பொருட்களை வழங்கும்.

தகவல் தொழில்நுட்பம், சேவைகள் மற்றும் கல்வி ஆகியவற்றில் இங்கிலாந்தின் உயர் மதிப்புள்ள சந்தைகளை இனி இந்தியர்கள் எளிதாக அணுகி பயனடைய முடியும். சமையல் கலைஞர்கள், யோகா பயிற்றுனர்கள், இசைக்கலைஞர்கள் மற்றும் வணிகர்கள் ஆகியோர் பயனடைவார்கள்.

இந்திய ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், பிரிட்டன் முதலீட்டாளர்களின் முதலீடுகளை ஈர்ப்பதற்கு இந்தியா – பிரிட்டன் இடையேயான இந்த தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் வழிவகுக்கும். இது அவர்களின் உலகளாவிய தடத்தை விரிவுபடுத்த உதவும். இந்த ஒப்பந்தம் ‘மேக் இன் இந்தியா’ மற்றும் ‘வோகல் ஃபார் லோக்கல்’ ஆகியவற்றுக்கு ஒரு பெரிய வெற்றியாக அமையும்.

அதிக வேலை வாய்ப்புகள் உருவாக்கத்தை இந்த ஒப்பந்தம் ஊக்குவிக்கிறது, இதன்மூலம் சமூகங்களை மேம்படுத்துகிறது. அதோடு, இந்தியாவின் ஆழமான வர்த்தக தலைமை முயற்சியை வலுப்படுத்துகிறது. இது பொருளாதார ஒத்துழைப்பின் ஒரு புதிய சகாப்தத்தை ஏற்படுத்துகிறது. நமது இருதரப்பு வர்த்தக உறவுகளை மீண்டும் புதுப்பிக்கிறது” என தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.