தஞ்சை சரஸ்வதி நூலகத்தை மாதிரி நூலகமாக அறிவிக்கக் கோரி வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

மதுரை: பழமையான தஞ்சை சரஸ்வதி நூலகத்தை மாதிரி நூலகமாக அறிவிக்கக் கோரிய வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த பிரபாகரன் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, உருது, மராத்தி உள்ளிட்ட மொழிகளில் சுமார் 60 ஆயிரம் கையெழுத்து பிரதிகளும், 4,503 அரிய புத்தகங்களும் உள்ளன. இந்த நூலகத்தில் 46 பணியிடங்கள் உள்ளன. தற்போது 14 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்து. எஞ்சிய இடங்கள் பல ஆண்டுகளாக நிரப்பப்படவில்லை.

மத்திய அரசு பழமையான நூலகங்களை பராமரிக்க நிதி ஒதுக்கீடு செய்து வருகிறது. இதனால், தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தையும் தேசிய நூலக திட்டத்தின் கீழ் மாதிரி நூலகமாக அறிவித்து உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனு அளிக்கப்பட்டது. இதுவரை நடவடிக்கை இல்லை. எனவே, தேசிய நூலக திட்டத்தின் கீழ் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தை “மாதிரி நூலகமாக” அறிவித்து புனரமைப்பு மற்றும் உட்கட்டமைப்புகள் ஏற்படுத்த நிதி ஒதுக்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனுவை நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஏ.டி.மரிய கிளாட் அமர்வு விசாரித்து, தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகம் மிகவும் பழமையானது. அதற்கு உரிய முக்கியத்துவம் வழங்கப்பட வேண்டும். மனு தொடர்பாக மத்திய, மாநில அரசுகள் 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.