புதுடெல்லி: இந்திய தேர்தல் ஆணையம் பிஹாரில் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் சோனியா காந்தி தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள், தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என விமர்சித்தனர்.
நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரின் 4-ம் நாளான இன்று (ஜூலை 24), நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்பாக மகர் துவார் பகுதியில் கூடிய எதிர்க்கட்சி எம்பிக்கள், பிஹாரில் இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் சிறப்பு தீவிர ஆய்வு (எஸ்ஐஆர்) என்ற பெயரிலான வாக்காளர் பட்டியல் திருத்தத்தை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கை ‘ஜனநாயத்தின் மீதான தாக்குதல்’ என்ற பேனரை பிடித்தபடி அவர்கள் கோஷங்களை எழுப்பினர்.
காங்கிரஸ் நாடாளுமன்றக் குழு தலைவர் சோனியா காந்தி, வயநாடு எம்பி பிரியங்கா காந்தி, காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கவுரவ் கோகாய், சிவ சேனா (உத்தவ் பிரிவு) எம்பி பிரியங்கா சதுர்வேதி, ராஷ்ட்ரிய ஜனதா தளம் எம்பி மனோஜ் ஜா, திமுக எம்பி ஆ ராசா, சமாஜ்வாதி கட்சி எம்பி ஜியாவுர் ரகுமான் பார்க், திரிணமூல் காங்கிரஸ் எம்பி கீர்த்தி ஆசாத் உள்ளிட்ட ஏராளமான எம்பிக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் எம்பி ராஜீவ் சுக்லா, “ஒட்டுமொத்த எதிர்க்கட்சிளும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளன. இந்த போராட்டம் தொடரும். இந்த விவகாரத்தில் உண்மையை தேர்தல் ஆணையம் ஒப்புக்கொள்ளும் வரை போராட்டம் நடத்துவோம். வாக்களிக்கும் உரிமையை தேர்தல் ஆணையம் மக்களிடம் இருந்து பறிக்கக்கூடாது.” என தெரிவித்தார்.