புதுடெல்லி: மும்பை ரயில் குண்டுவெடிப்பு வழக்கில் சிறப்பு நதிமன்றத்தால் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட 12 பேரை, உயர் நீதிமன்றம் விடுவித்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றத் தீர்ப்பை உச்ச நீதிமன்றம் நிறுத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2006-ம் ஆண்டு ஜூலை 11-ம் தேதி மும்பை புறநகர் ரயில்களில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததில் 189 பேர் உயிரிழந்தனர். 800-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இது தொடர்பாக 12 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த மும்பை சிறப்பு நீதிமன்றம் கடந்த 2015-ம் ஆண்டு 12 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. இவர்களில் 5 பேருக்கு மரண தண்டனையும் 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.
இதையடுத்து, குற்றவாளிகள் சார்பில் மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்றம், குற்றவாளிகள் மீதான குற்றச்சாட்டுகளை ஆதாரத்துடன் நிரூபிக்க அரசுத் தரப்பு தவறிவிட்டதாகக் கூறி 12 பேரையும் விடுதலை செய்யுமாறு கடந்த 21-ம் தேதி உத்தரவிட்டது.
இந்த தீர்ப்பை எதிர்த்து மகாராஷ்டிர அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 22-ம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்டது. மாநில அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, மகாராஷ்டிர அரசின் மேல்முறையீட்டை அவசர மனுவாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் அமர்வில் கோரிக்கை வைத்தார்.
இதையடுத்து, இந்த மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. நீதிபதிகள் எம்.எம் சுந்தரேஷ், என். கோட்டீஷ்வர் சிங் வழக்கை விசாரித்தனர். வழக்கில் ஆஜரான துஷார் மேத்தா, திட்டமிட்ட குற்றங்களை தடுக்கும் மகாராஷ்டிர சட்டத்தின் (MCOCA) கீழ் நிலுவையில் உள்ள விசாரணைகளைப் பாதிக்கும் கருத்துக்கள் உயர் நீதிமன்றத் தீர்ப்பில் உள்ளதாகவும் எனவே, அந்த தீர்ப்புக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
அதற்கு நீதிபதிகள், MCOCA வழக்குகளை விசாரிக்கும் விசாரணை நீதிமன்றங்கள், உயர் நீதிமன்றத் தீர்ப்பை முன்னுதாரணமாகக் கருதாது என்று தெரிவித்தனர். மேலும், விடுவிக்கப்பட்டவர்கள் மீண்டும் சிறைக்குத் திரும்பத் தேவையில்லை என தெரிவித்த நீதிமன்றம், அதேநேரத்தில் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.