விமானப் பயணத்தில் செல்போனை Airplane Modeல் வைப்பது ஏன் அவசியம்? விமானியின் விளக்கம்

விமானப் பயணத்தின்போது செல்போன்களை ஏரோபிளேன் மோடில் வைப்பது மிகவும் முக்கியமானது என ஒரு விமானி தெளிவாக விளக்கியுள்ளார். விமானி ஒருவர் டிக்டாக்கில் இதுகுறித்து பதிவு செய்திருக்கிறார்.

சொல்போனை ஏரோபிளேன் மோடில் வைக்க வேண்டும் என்பது மிக அவசியமான ஒன்று தான், பயணிகளின் பாதுகாப்பிற்கு இது அவசியமானது என்று கூறியுள்ளார். சமீபத்தில் விமானத் துறையில் ஏற்பட்ட இயக்க மற்றும் தொழில்நுட்ப சிக்கல்களுக்கு மத்தியில், இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்டு வருகிறது.

செல்போனை ஏரோபிளேன் மோடில் வைக்காவிட்டால் என்ன நடக்கும்?

செல்போனை ஏரோபிளேன் மோடில் வைக்காவிட்டால், அது விமானத்தின் தகவல் தொடர்பு அமைப்புகளில் தலையீடு செய்யக்கூடும் என்று அமெரிக்காவின் பெடரல் விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) மற்றும் விமான நிறுவனங்கள் ஏற்கெனவே எச்சரிக்கை விடுத்துள்ளன.

இதனால், விமானத்தில் பாதுகாப்பு அபாயங்கள் ஏற்படலாம், விமானங்கள் தாமதமாகலாம் அல்லது ரத்து செய்யப்படலாம்.

விமானி ஒருவர் இதைப் பற்றி விளக்குகையில், “செல்போன்கள் ஏரோபிளேன் மோடில் இல்லாவிட்டால், விமானம் வானில் இருந்து விழாது, விமானத்தின் அமைப்புகளை நேரடியாகப் பாதிக்காது, ஆனால், இது விமானிகள் பயன்படுத்தும் ஹெட்செட்களில் தொந்தரவை ஏற்படுத்தும்.

ஒரு விமானத்தில் 70, 80 அல்லது 150 பயணிகள் இருக்கும்போது, மூன்று அல்லது நான்கு பேரின் செல்போன்கள் கூட ரேடியோ டவருடன் இணைப்பை ஏற்படுத்த முயற்சித்தால், அது ரேடியோ அலைகளை உருவாக்குகிறது. இந்த ரேடியோ அலைகள், விமானிகள் பயன்படுத்தும் ஹெட்செட்களில் தலையீடு செய்யலாம்” என்று கூறியிருக்கிறார்.

தனது அனுபவம் குறித்து பகிர்ந்து அந்த விமானி, விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முயற்சிக்கும்போது, ஹெட்செட்டில் “கொசு ஒலி” போன்ற எதோ எரிச்சலூட்டும் ஒலி கேட்டதாக அவர் கூறினார். இதனால் தான் செல்போனை ஏரோபிளேன் மோடில் அவசியம் என்று விவரித்திருக்கிறார்.

பயணிகளுக்கும் சிரமம்

ஏரோபிளேன் மோடில் வைக்காவிட்டால், செல்போன் தொடர்ந்து செல்லுலார் சிக்னல்களைத் தேடுவதால், அதன் பேட்டரி வேகமாக தீர்ந்துவிடும். இது பயணிகளுக்கு கூடுதல் சிரமத்தை ஏற்படுத்தலாம் என்று கூறுகிறார்.

செல்போன் தலையீடு காரணமாக விமான விபத்துகள் நிகழ்ந்ததாக இதுவரை எந்தப் பதிவுகளும் இல்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஏரோபிளேன் மோடில் வைப்பது பாதுகாப்பிற்கு உகந்ததாகக் கருதப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.