5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீன சுற்றுலா பயணிகளுக்கு இந்திய விசா!

பெய்ஜிங்: கடந்த 2020-ல் கரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் முயற்சியாக இந்தியா அனைத்து சுற்றுலா விசாக்களையும் நிறுத்தி வைத்தது.

இந்நிலையில் சீன குடிமக்களுக்கு இன்று (ஜூலை 24) முதல் மீண்டும் சுற்றுலா விசா வழங்கப்படும் என பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. சீனர்களுக்கு இந்தியா சுற்றுலா விசா வழங்குவது 5 ஆண்டுகளில் இது முதல்முறையாகும்.

இதுகுறித்து பெய்ஜிங்கில் உள்ள இந்திய தூதரகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “இந்தியாவுக்கான சுற்றுலா விசா பெறுவதற்கு சீன குடிமக்கள் ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம். பிறகு குறிப்பிட்ட தேதியில் பெய்ஜிங், ஷாங்காய் மற்றும் குவாங்சோவில் உள்ள இந்திய விசா விண்ணப்ப மையங்களில் தங்கள் பாஸ்போர்ட் மற்றும் தேவையான ஆவணங்களை நேரில் சமர்ப்பிக்கலாம்” என்று கூறியுள்ளது.

கரோனோ வைரஸ் பரவலை தொடர்ந்து கல்வான் பள்ளத்தாக்கில் இந்திய – சீன ராணுவத்தினர் இடையிலான மோதலால் எல்லையில் பதற்றம் நிலவியது. 1962-ம் ஆண்டுக்கு பிறகு இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் சீர்குலைந்தது. இதையடுத்து ராஜதந்திர மற்றும் ராணுவ அளவிலான தொடர் பேச்சுவார்த்தைகளை தொடர்ந்து கிழக்கு லடாக்கில் பிரச்சினைக்குரிய இடங்களில் இருந்து இரு நாடுகளும் தங்கள் படைகளை திரும்பப் பெற்றன.

இதையடுத்து ரஷ்யாவின் கசன் நகரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியும் சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசினர். அப்போது இரு தரப்பு உறவுகளை மேம்படுத்த பல்வேறு முடிவுகள் எடுத்தனர். இந்திய மாணவர்கள் மற்றும் வணிகர்களுக்கு விசா வழங்குவதை சீனா படிப்படியாக மீண்டும் தொடங்கிய போதிலும், பொதுப் பயணம் தடை செய்யப்பட்டிருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.