கண்ணூர்: கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஷோரனூர் அருகே மஞ்சக்கல் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண் சவும்யா (23). இவர் கடந்த 2011-ம் ஆண்டு பிப்ரவரி 1-ம் தேதி இரவு எர்ணாகுளத்தில் இருந்து ஷோரனூருக்கு பயணிகள் ரயிலில் சென்றுள்ளார். அந்த ரயில் பெட்டியில் சவும்யா மட்டும் தனியாக இருந்துள்ளார்.
அப்போது சவும்யா பயணித்த ரயில் பெட்டியில் ஏறிய தமிழகத்தின் கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தை சேர்ந்த சார்லி தாமஸ் என்ற கோவிந்தசாமி (வயது 30) என்பவர் ஏறியுள்ளார். இவருக்கு ஒரு கை மட்டுமே உண்டு. அங்கு தனியாக இருந்த சவும்யாவை கொடூரமாக தாக்கி, ரயிலில் இருந்து வெளியே கோவிந்தசாமி தள்ளினார்.
பின்னர் அவரும் கீழே குதித்து, காயமடைந்து ரயிம் தண்டவாளம் அருகே கிடந்த சவும்யாவை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதைத் தொடர்ந்து சவும்யாவின் செல்போன், பர்ஸில் இருந்த பணத்துடன் கோவிந்தசாமி தப்பியோடி விட்டார். தண்டவாளம் அருகே காயத்துடன் இருந்த சஷம்யாவை, அருகிலிருந்த கிராம மக்கள் மீட்டு திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், 2 நாட்களுக்குப் பின்னர் 2011-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் சவும்யா.
போலீஸார் தீவிர விசாரணை நடத்தி, கோவிந்தசாமியை கைது செய்தனர். நீதிமன்றத்தில் கோவிந்தசாமிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவருடைய மரண தண்டனையை உச்ச நீதிமன்றம் ஆயுள் தண்டனையாக குறைத்ததையடுத்து கோவிந்த சாமி, கண்ணூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில், சிறையில் இருந்து கோவிந்தசாமி நேற்று அதிகாலை தப்பிச் சென்றுவிட்டார். இது தொடர்பாக தகவல் அறிந்த சிறைத்துறை அதிகாரிகள், போலீஸார் இணைந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
கண்ணூரைச் சுற்றியுள்ள பகுதியில் போலீஸார் ரோந்து சுற்றி வந்து கோவிந்தசாமியைத் தீவிரமாகத் தேடினர். இந்நிலையில், 4 மணி நேர தேடுதல் வேட்டைக்குப்பின் கண்ணூரில் உள்ள தலப்பு என்ற பகுதியில் இருந்த பாழடைந்த கிணற்றுக்குள் கோவிந்தசாமி பதுங்கி இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், மீண்டும் கண்ணூர் மத்திய சிறையில் அடைத்தனர்.
ஒற்றை கை மட்டுமே உடையவர் என்பதால் போலீஸார் கண்ணூர் அருகிலுள்ள பகுதியில் எளிதாக விசாரணை நடத்தி அடையாளம் காண முடிந்துள்ளது.
சிறையிலிருந்து ஆயுள் தண்டனைக் கைதி தப்பிச் சென்ற சில மணி நேரங்களில் அவரைக் கைது செய்த அதிகாரிகளுக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் பாராட்டுத் தெரிவித்துள்ளனர்.
ஒரு கை மட்டுமே உள்ள நிலையில், சிறையிலிருந்து அவர் தப்பியது எப்படி என்பது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.