டாக்கா,
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவிலேயே வங்காளதேசம் 2-0 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றிவிட்டது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற வங்காளதேச அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடியது. குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் சாஹிப்சாதா பர்ஹான் வங்காளதேச பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். வெறும் 41 பந்துகளில் 63 ரன்கள் அடித்த நிலையில் பர்ஹான் ஆட்டமிழந்தார். பின்னர் களமிறங்கிய வீரர்களில் ஹசன் நவாஸ் (33 ரன்கள்), முகமது நவாஸ் (27 ரன்கள்) ஆகியோரின் கணிசமான ஒத்துழைப்புடன் பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 178 ரன்கள் அடித்தது.
பின்னர் 179 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய வங்காளதேச அணி இம்முறை பாகிஸ்தான் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் விக்கெட்டுகளை தாரை வார்த்தது. அந்த அணியில் முகமது சாய்புதின் (35 ரன்கள்) தவிர மற்ற வீரர்கள் யாரும் 20 ரன்களை கூட தொடவில்லை. 16.4 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்த வங்காளதேசம் 104 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் 74 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அபார வெற்றி பெற்றது. பாகிஸ்தான் தரப்பில் சல்மான் மிர்சா 3 விக்கெட்டுகளும், பஹீம் அஷ்ரப் மற்றும் முகமது நவாஸ் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ஏற்கனவே தொடரை இழந்து விட்ட பாகிஸ்தானுக்கு இது ஆறுதல் வெற்றியாக அமைந்தது. இதன் மூலம் வங்காளதேச அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. வங்காளதேச வீரர் ஜேக்கர் அலி தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார்.