தூத்துக்குடி விமான நிலைய புதிய முனையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார்; ரூ.4,874 கோடியில் திட்டங்கள் தொடக்கம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் விரிவாக்கம் செய்யப்பட்ட விமான நிலையத்தை பிரதமர் மோடி சனிக்கிழமை இரவு திறந்து வைத்தார். அதன்பின், ரூ.4,874 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

தூத்துக்குடி விமான நிலையம் ரூ.452 கோடி செலவில் சர்வதேச தரத்துக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. பெரிய வகை விமானங்களும் தரையிறங்கும் வகையில் 3,115 மீட்டர் நீளம் கொண்ட விமான ஓடுதளம், இரவு நேரத்தில் விமானம் தரையிறங்குவதற்கான வசதிகள், ஒரே நேரத்தில் ஐந்து ஏ- 321 ரக விமானங்களை நிறுத்தி வைப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

மேலும், சுமார் 17 ஆயிரத்து 340 சதுர மீட்டர் பரப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய பயணிகள் முனையத்தில் 43 மீட்டர் உயர கன்ட்ரோல் டவர், தீயணைப்பு படைக்கான புதிய கட்டிடம், 3 ஏரோ பிரிட்ஜ், 5 விருந்தினர் அறைகள், ஒரு பெரிய உணவகம், சிற்றுண்டி கடைகள், மருந்தகம், ஸ்பா மையம், தாய்மார்கள் பாலூட்டும் அறை, செல்போன், லேப்டாப் சார்ஜ் செய்வதற்கான இடங்கள், இலவச வைபை வசதி உள்ளிட்ட பல்வேறு வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

புதிய முனையத்தின் புறப்பாடு பகுதியில் 4 வாயில்களும், பயணிகள் வெளியே வருவதற்கான 4 வாயில்களும், 21 பயணிகள் செக்-இன் கவுன்ட்டர்களும் உள்ளன. ஒரு மணி நேரத்துக்கு 1,440 பயணிகளை கையாளும் வகையில் அதிநவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. செட்டிநாடு கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள, இந்த புதிய முனையம் 4 நட்சத்திர அந்தஸ்து பெற்ற பசுமை கட்டிடமாக உள்ளது.

விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி விமான நிலையத்தின் திறப்பு விழா சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இந்திய விமானப் படைக்கு சொந்தமான தனி விமானம் மூலம் தூத்துக்குடி விமான நிலையம் வந்து சேர்ந்தார்.

பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய, மாநில அமைச்சர்கள், நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் பாஜக தலைவர்கள் வரவேற்றனர். தொடர்ந்து தூத்துக்குடி விமான நிலைய புதிய பயணிகள் முனைய கட்டிடத்தை திறந்து வைத்த பிரதமர், அங்குள்ள வசதிகளை பார்வையிட்டார்.

அதைத் தொடர்ந்து, தொடர்ந்து விமான நிலைய வளாகத்தில் நடைபெற்ற விழாவில், ரூ.4,874 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் பேசினார். தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்தும் வகையில் ரூ.285 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள வடக்கு சரக்கு தளம் 3-ஐ பிரதமர் தொடங்கி வைத்தார்.

மேலும், தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் என்எச்-36 சேத்தியாதோப்பு – சோழபுரம் பிரிவின் நான்கு வழிச்சாலை, என்எச்-138 தூத்துக்குடி துறைமுகச் சாலை பிரிவின் ஆறு வழிச்சாலை ஆகிய ரூ.2,557 கோடி மதிப்பிலான மேம்படுத்தப்பட்ட சாலை வசதி திட்டங்கள், ரயில்வே துறை சார்பில் நாகர்கோவில் நகரம் – நாகர்கோவில் சந்திப்பு – கன்னியாகுமரி பாதையை இரட்டிப்பாக்குதல், ஆரல்வாய்மொழி – நாகர்கோவில் சந்திப்பு மற்றும் திருநெல்வேலி – மேல்ப்பாளையம் ரயில் பாதையை இரட்டிப்பாக்குதல், மதுரை – போடிநாயக்கனூர் ரயில் பாதையை மின்மயமாக்குதல் ஆகிய ரூ.1,032 கோடி மதிப்பிலான முடிவுற்ற திட்டப் பணிகளை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார்.

மேலும், தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்கள் பயன்பெறும் வகையில் கூடங்குளம் அணுமின் நிலைய அலகு 3 மற்றும் 4-ல் இருந்து மின்சாரத்தை கொண்டு செல்வதற்காக ரூ.548 கோடி செலவில் 2 ஜிகா வாட் சுத்தமான மற்றும் நிலையான எரிசக்தி பரிமாற்ற வசதிக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், மின்துறை அமைச்சர் மனோகர் லால், சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் கிஞ்சரப்பு ராம்மோகன் நாயுடு, துறைமுகங்கள் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், சிவில் விமான போக்குவரத்து இணை அமைச்சர் முரளிதர் மொஹோல், தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன், தூத்துக்குடி மக்களவை தொகுதி உறுப்பினர் கனிமொழி, ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவை உறுப்பினர் எம்.சி.சண்முகையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, பெ.கீதாஜீவன், அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், டி.ஆர்.பி.ராஜா, தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்எல்ஏ, முன்னாள் தலைவர்கள் அண்ணாமலை, தமிழிசை சவுந்தரரராஜன், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பிரதமர் வருகையை முன்னிட்டு தூத்துக்குடி விமான நிலையத்தை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. சுமார் 2,000 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.