இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீராங்கனையும், அதிரடி மிடில்-ஆர்டர் பேட்டருமான வேதா கிருஷ்ணமூர்த்தி அனைத்து விதமான தொழில்முறை கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 32 வயதான அவர், தற்போது இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், வர்ணனையாளராகப் பணியாற்றி வரும் போது இந்த திடீர் முடிவை அறிவித்தது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தனது ஓய்வு முடிவை ‘எக்ஸ்’ பக்கத்தில் நெகிழ்ச்சியான பதிவுடன் வேதா வெளியிட்டுள்ளார். அதில், தனது கிரிக்கெட் பயணத்திற்கு உதவிய குடும்பத்தினர், பயிற்சியாளர்கள், சக வீராங்கனைகள் மற்றும் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நன்றி தெரிவித்தார்.
மேலும் படிங்க: டெஸ்ட்டில் முதன்முறையாக.. பும்ரா செய்த மோசமான சாதனை.. முழு விவரம்!
வேதா கிருஷ்ணமூர்த்தியின் கிரிக்கெட் பயணம்
கர்நாடகாவைச் சேர்ந்த வேதா கிருஷ்ணமூர்த்தி, 2011-ஆம் ஆண்டு தனது 18-வது வயதில் இந்திய அணிக்காக சர்வதேசப் போட்டிகளில் அறிமுகமானார். தனது அதிரடியான பேட்டிங் திறமைக்காக அறியப்பட்ட அவர், இந்திய அணிக்காக 48 ஒருநாள் போட்டிகள் மற்றும் 76 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். 48 போட்டிகளில் விளையாடி, 8 அரை சதங்களுடன் 829 ரன்கள் குவித்துள்ளார். அதே போல 76 போட்டிகளில் விளையாடி 2 அரை சதங்களுடன் 875 ரன்கள் எடுத்துள்ளார். இந்திய கிரிக்கெட்டில் அவரது பங்களிப்பு மிகவும் முக்கியமானது. 2017-ஆம் ஆண்டு நடைபெற்ற மகளிர் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை சென்ற இந்திய அணியிலும், 2020-ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி வரை சென்ற அணியிலும் அவர் முக்கியப் பங்கு வகித்தார்.
புதிய தொடக்கம்
கடந்த சில ஆண்டுகளாக இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வந்த வேதா, உள்நாட்டுப் போட்டிகளில் தொடர்ந்து விளையாடி வந்தார். மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரில் குஜராத் ஜெயண்ட்ஸ் அணிக்காக விளையாடினார். 2021ம் ஆண்டில், கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக தனது தாய் மற்றும் சகோதரியை இழந்தது, அவரது தனிப்பட்ட வாழ்க்கையில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த துயரிலிருந்து மீண்டு வந்து, அவர் மீண்டும் கிரிக்கெட் களத்திலும், வர்ணனையாளராகவும் தனது பயணத்தைத் தொடர்ந்தது பலருக்கும் உத்வேகம் அளித்தது.
ஓய்வு அறிவிப்பு
வேதா தனது ஓய்வு அறிக்கையில், “கிரிக்கெட் எனக்கு எல்லாவற்றையும் கொடுத்தது. இந்த விளையாட்டுக்கு நான் மீண்டும் ஏதாவது திருப்பி கொடுக்க விரும்புகிறேன். எனது கிரிக்கெட் பயணத்தின் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார். இது, அவர் எதிர்காலத்தில் பயிற்சியாளர் அல்லது முழுநேர வர்ணனையாளர் போன்ற பொறுப்புகளை ஏற்கலாம் என்பதற்கான சாத்திய கூறுகளாக பார்க்கப்படுகிறது. இந்திய மகளிர் கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு வேதா கிருஷ்ணமூர்த்தியின் பங்களிப்பு என்றும் நினைவுகூரப்படும். அவரது ஓய்வு முடிவுக்கு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் படிங்க: டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து பும்ரா ஓய்வு பெறுகிறாரா? அதிர்ச்சி தகவல்!