ராஜராஜன், ராஜேந்திர சோழனுக்கு சிலைகள்: கங்கைகொண்ட சோழபுரம் ஆடி திருவாதிரை விழாவில் பிரதமர் மோடி அறிவிப்பு

அரியலூர்: மாமன்னர்கள் ராஜராஜ சோழன், ராஜேந்திர சோழனுக்கு தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.

அரியலூர் மாவட்டம் கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் வளாகத்தில், மத்திய கலாச்சாரத் துறை சார்பில் ராஜேந்திர சோழனின் பிறந்த நட்சத்திர மான ஆடி திருவாதிரை விழா, கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில் கட்டத் தொடங்கிய ஆயிரமாவது ஆண்டு விழா, தென்கிழக்கு ஆசிய நாடுகளின் மீது படையெடுத்துச் சென்ற ஆயிரமாவது ஆண்டு நிறைவு விழா என முப்பெரும் விழா கடந்த 23-ம் தேதி தொடங்கியது.

விழாவின் நிறைவு நாள் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி நேற்று திருச்சியிலிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கங்கைகொண்ட சோழபுரம் பொன்னேரியில் அமைக்கப்பட்டிருந்த ஹெலிபேட்டில் பிற்பகல் 12.15 மணிக்கு வந்தார். அப்போது பிரதமர், தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை, துண்டு அணிந்திருந்தார். அங்கிருந்து கோயிலுக்கு வந்த பிரதமர் மோடிக்கு பூரண கும்பமரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, கலாச்சாரத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த புகைப்படக் கண்காட்சியையும், சிற்பங்களையும் பார்வையிட்டார்.

பின்னர், காசியிலிருந்து பிரதமர் மோடி கொண்டு வந்திருந்த கங்கை நீரைக் கொண்டு பெருவுடையாருக்கு அபிஷேகம் நடைபெற்றது. இதில் பிரதமர் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தார். தொடர்ந்து விழா மேடைக்கு வந்த பிரதமருக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தஞ்சாவூர் கோயில் ஓவியத்தையும், தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வீணை ஓவியத்தையும் பரிசாக வழங்கினர். விழாவில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் வரவேற்றார். ஓதுவார்கள் தேவாரப் பாடல்கள் பாடினர்.

தொடர்ந்து, இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது. இளையராஜா இசைத்த `ஓம் சிவோஹம்’ பாடலை பிரதமர் உள்ளிட்டோர் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர், ராஜேந்திர சோழன் உருவம் பொறித்த நினைவு நாணயம், திருவாசக தொகுப்பு நூலை பிரதமர் வெளியிட்டார். ‘வணக்கம் சோழ மண்டலம்’ என்று தொடங்கிய பிரதமர், ‘நமசிவாய வாழ்க, நாதன் தாழ் வாழ்க, இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க’ என்ற திருவாசகத்தை மேற்கோள் காட்டி தமிழில் பேசினார்.

பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது: நாட்டின் 140 கோடி மக்கள் நலனுக்காக இக்கோயிலில் எனது வேண்டுதலை முன்வைத்தேன். ராஜராஜ சோழனும், அவரது மகன் ராஜேந்திர சோழனும் இந்தியாவின் அடையாளம் மற்றும் பெருமைக்குரியவர்கள். சோழரசின் வரலாறு மற்றும் பாரம்பரியம் நாட்டின் வலிமையும், திறனையும் பிரதிபலிக்கிறது. சோழர்களின் காலம் இந்திய வரலாற்றில் பொற்காலமாகும். ராஜேந்திர சோழன் கட்டிய கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோயில், உலகம் முழுவதும் கட்டிடக் கலையின் அதிசயமாக பார்க்கப்படுகிறது.

சோழர்களின் காலத்தில் இந்தியா அடைந்த பொருளாதார வளர்ச்சி, தற்போதும் நம்மை ஊக்குவிக்கிறது. ராஜராஜ சோழன் சக்திவாய்ந்த கடற்படையை உருவாக்கினார். ராஜேந்திர சோழர் அதை மேலும் வலுப்படுத்தினார். சோழர்கள் இலங்கை, மாலத்தீவுகள், தென்கிழக்காசிய நாடுகளுடன் தூதரகம் மற்றும் வர்த்தக உறவுகளை வளர்த்தனர். அன்று ராஜேந்திர சோழன் மாலத்தீவு சென்று வந்தார். நான் இரு தினங்களுக்கு முன்பு மாலத்தீவு சென்று வந்தேன்.

ராஜேந்திர சோழன் கங்கை நீரை பொன்னேரியில் ஊற்றினார். இந்த நிகழ்வை நினைவுகூரும் வகையில், காசியில் இருந்து கங்கை நீர் தற்போது மீண்டும் கங்கைகொண்ட சோழபுரத்துக்கு கொண்டுவரப்பட்டது.

சோழர்கள் கடற்படை, வரி அமைப்புகள், நகராட்சி நிர்வாகங்கள் மூலம் வலிமையான அரசை உருவாக்கினர். இந்தியாவின் பாதுகாப்பை முன்னிலைப்படுத்தி, ஆபரேஷன் சிந்தூர் மூலம் உலகம் தற்போது இந்தியாவின் உறுதியான நடவடிக்கைகளை பார்த்து வியக்கிறது.

ராஜேந்திர சோழன் தனது தந்தையின் கோயிலைவிட உயரம் குறைந்த விமானம் அமைத்தார். இது தாழ்மையின் அடையாளம். அவ்வாறு புகழ்பெற்ற ராஜராஜ சோழனுக்கும், ராஜேந்திர சோழனுக்கும் தமிழகத்தில் பிரம்மாண்ட சிலைகள் அமைக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில், தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, எஸ்.எஸ்.சிவசங்கர், எம்.பி. திருமாவளவன், ஆட்சியர் பொ.ரத்தினசாமி, பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், மூத்த தலைவர் ஹெச்.ராஜா, முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தெலங்கானா முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தர்ராஜன், எம்எல்ஏக்கள் க.சொ.க.கண்ணன், வானதி சீனிவாசன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.