Eng vs Ind : 'அதனால மட்டும்தான் 'டிரா' கேட்டேன்!' – காரணம் சொல்லும் ஸ்டோக்ஸ்!

‘டிராவில் முடிந்த போட்டி…’

இங்கிலாந்து மற்றும் இந்தியா அணிகளுக்கிடையே மான்செஸ்டரில் நடந்த நான்காவது போட்டி டிராவில் முடிந்திருக்கிறது. இரண்டாம் இன்னிங்ஸில் இந்திய அணியின் சிறப்பான பேட்டிங் பெர்பார்மென்ஸே போட்டியை இங்கிலாந்தின் கையிலிருந்து பறித்தது. சதம் மற்றும் 5 விக்கெட் ஹாலை எடுத்திருந்த இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸூக்குதான் ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. விருதை வாங்கிவிட்டு அவர் சில முக்கியமான விஷயங்களைப் பேசியிருந்தார்.

Stokes
Stokes

‘முயற்சி திருவினையாக்கும்…’

ஸ்டோக்ஸ் பேசியதாவது, ‘ஒரு ஆல்ரவுண்டராக சிறப்பாக செயல்படும் சமயத்தில் போட்டியின் முடிவு எப்படி சென்றிருக்கிறது என்பதும் முக்கியம். போட்டியின் முடிவு எங்களுக்கு சாதகமாக இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். என்னிடம் இருக்கும் எல்லாவற்றையும் கொட்டி கடுமையாக முயன்று பார்த்துவிட வேண்டும் என்றுதான் எப்போதும் நினைப்பேன்.

என்னுடைய வீரர்களிடமும் அதையேதான் சொல்வேன். கடுமையான பாதையாக இருந்தாலும், தொடர்ந்து முயற்சி செய்வோம். நம்மிடம் இருக்கும் ஆற்றல் எல்லாமும் தீர்ந்துவிட்டாலும் முயற்சி செய்ய வேண்டும் என்பதுதான் என்னுடைய பாணி. வலியும் மற்றுமொரு உணர்வுதான். ஆனாலும் நாங்கள் ஒரு கட்டத்தில் சோர்வடைந்தோம்.

Stokes
Stokes

‘அதுக்காகதான் டிரா…’

இந்திய அணி கடுமையாக முயன்று ஆட்டத்துக்குள் வந்துவிட்டது. ஜடேஜாவும் வாஷிங்டன் சுந்தரும் அற்புதமாக ஆடினார்கள். டிரா மட்டும்தான் ஒரே வாய்ப்புள்ள ரிசல்ட் எனும் நிலைக்கு போட்டியை கொண்டு வந்துவிட்டனர். அப்படியொரு சூழலில் மேலும் மேலும் என்னுடைய பௌலர்களை பௌலிங் செய்ய வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. டாஸன் ஏற்கனவே கொஞ்சம் சோர்வாகியிருந்தார். அவருக்கு கொஞ்சம் தசைப்பிடிப்பும் இருந்தது. கடைசி அரை மணி நேரத்தில் பௌலர்களை வைத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை.

எங்களின் பௌலிங் யூனிட் நிறையவே உழைத்துவிட்டது. அடுத்த போட்டிக்கு முன்பாக நாங்கள் ஒவ்வொரு வீரரையும் பரிசோதித்து அவர்களின் நிலையை அறிந்து முடிவெடுக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக எங்களிடம் நிறைய வேகப்பந்து வீச்சாளர்கள் இருக்கிறார்கள். இந்தத் தொடர் நிறைய ஏற்ற இறக்கங்களை கொண்டதாக இருக்கிறது.

Jaddu & Washi
Jaddu & Washi

ஒரு கட்டத்தில் அவர்களின் கை ஓங்குகிறது. ஒரு கட்டத்தில் நாங்கள் சிறப்பாக ஆடுகிறோம். இரண்டு அணிகளுமே சிறந்த அணிகள். அழுத்தத்தோடு இங்கே வந்து இந்திய அணி ஆடும் விதத்தை பாராட்டியே ஆக வேண்டும்.’ என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.