புதுடெல்லி,
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் பலியானதற்கு பதிலடியாக, இந்தியா தரப்பில் இருந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதுபற்றி விளக்கம் அளிக்கும்படி காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் ஆபரேஷன் சிந்தூர் பற்றி விரிவாக விவாதம் நடத்தப்படும் என எதிர்க்கட்சிகளிடம் தெரிவிக்கப்பட்டது.
இதனை முன்னிட்டு, மக்களவையில் மத்திய பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங் இன்று ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி விளக்கம் அளித்து பேசினார். அப்போது அவர், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் பற்றி கேள்வி எழுப்பும் எதிர்க்கட்சியினர், சரியான கேள்விகளை கேட்கவில்லை என குற்றச்சாட்டாக கூறினார்.
பொது விவகாரங்கள் பற்றி அரசிடம் முக்கிய கேள்விகளை கேட்க வேண்டியது எதிர்க்கட்சிகளின் வேலை. நம்முடைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நம்முடைய விமானங்களில் எத்தனை சுட்டு வீழ்த்தப்பட்டன? என கேட்கின்றனர். ஆனால், நம்முடைய படையினர் பாகிஸ்தானின் எத்தனை விமானங்களை சுட்டு வீழ்த்தினர் என ஒருபோதும் கேட்கவேயில்லை என கூறினார்.
இந்நிலையில், ஆபரேஷன் சிந்தூர் பற்றி மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் மற்றும் நாடாளுமன்ற மாநிலங்களவை எம்.பி.யான நடிகர் கமல்ஹாசனிடம் ஆபரேஷன் சிந்தூர் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
இதற்கு பதிலளித்த அவர், மேற்கொள்ள வேண்டிய தேவையான விசயங்கள் எதுவும் அவைக்குள்ளேயே மேற்கொள்ளப்பட வேண்டும் என கூறினார்.
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை பற்றி பேசிய ராஜ்நாத் சிங், லட்சியம் பெரிய அளவில் இருக்கும்போது, சிறிய விவகாரங்களில் நாம் கவனம் செலுத்த கூடாது. ஏனெனில், அதில் நாம் கவனம் செலுத்தும்போது, தேச பாதுகாப்பில் இருந்து நம் கவனம் திசை திரும்பி விடும் என கூறினார்.