விருதுநகர் மாவட்டத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி “மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம்” என்ற பிரசார பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் சிவகாசியில் அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் நடைபெற்றது.

ஒருபோதும் அதிமுகவைக் காட்டிக் கொடுக்கமாட்டேன்
அப்போது கூட்டத்தில் பேசிய ராஜேந்திர பாலாஜி, “பண மோசடி வழக்கில் தன்னை திமுக அரசு கைது செய்து சிறையில் வைத்திருந்தபோது அதிமுகவிற்கு எதிராக காவல்துறை உயர் அதிகாரிகள் பிரமாண பத்திரத்தில் கையெழுத்து கேட்டு மிரட்டினார்கள்.
நாங்கள் சொல்வதைக் கேட்டால் உங்களுக்குத் தேவையானதைச் செய்வோம் என அதிகாரிகள் தெரிவித்தார்கள். என்னைச் சிறைக்குள் தனிமைச் சிறையில், இருட்டு அறைக்குள் என்னை அடைத்து வைத்துப் பணிய வைக்க நினைத்தார்கள்.
ஆனால் நான் எதற்கும் கட்டுப்படவில்லை. செத்தாலும் சாவேன் ஒருபோதும் அதிமுகவைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் எனத் தெரிவித்துவிட்டேன்.
சிறையில் வைத்து என்னை அடிபணிய வைப்பதற்கு ஒரு ஊறுகாய் கூட கொடுக்க விடாமல் தடுத்தார்கள். எதற்கும் நான் அஞ்சவில்லை என்ற ஆதங்கத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் என்னை வேட்டையாடியது” எனப் பேசிக்கொண்டே இருக்கையில் அழத் துவங்கியவர், “எப்பொழுதும் கொடுப்பதுதான் எனது வழக்கம் நான் யாரிடமும் பணம் வாங்கவில்லை” எனக் கண்ணீர் மல்கப் பேசினார்.

“யார் என்ன சொன்னாலும் நான் சிவகாசியில் தான் வரும் சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவேன். என்னை இரு முறை அமைச்சராக்கிய சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு நிச்சயம் வெற்றி பெறுவேன்” எனச் சூளுரைத்தார்.
வேலை வாங்கி தருவதாகக் கூறி சுமார் 3 கோடி வாங்கியதாகக் குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் 16 நாள் தலைமறைவிற்குப் பின் 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் வைத்து கைது செய்யப்பட்டார்.