Tamilnadu Government, Google, free training : தமிழ்நாடு அரசு நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் போட்டித்தேர்வர்களுக்கான இலவச பயிற்சி அளிப்பது முதல் தொழில் பயிற்சி உள்ளிட்ட அற்புதமான முன்னெடுப்புகளை செய்து வருகிறது. அந்தவகையில் அந்த திட்டத்துக்கு வலுசேர்க்கும் வகையில் இப்போது புதிய நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது. கல்லூரிகளில் கணிணி அறிவியில் படிக்கும் மாணவர்களுக்கு கூகுள் நிறுவனத்துடன் இணைந்து கேமிங் டெலவப்பர் பயிற்சியை நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக கூகுள் நிறுவனத்துடன் தமிழ்நாடு அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ஒப்பந்தம் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்தானது.
நான் முதல்வன் திட்டம்
2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 1ஆம் தேதியன்றுதமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் தொடங்கப்பட்ட நான் முதல்வன் திட்டம், தமிழ்நாட்டில் உயர்கல்வியில் புரட்சியை ஏற்படுத்தும் ஒரு மாபெரும் முயற்சியாகும். இத்திட்டமானது ஆண்டுதோறும் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களைத் திறன் சார்ந்த பயிற்சிகள் மூலம் தொழில்துறைக்கு தயாரான திறன் மிகு சமுதாயத்தை உருவாக்கும் இலட்சிய நோக்கத்துடன் தொடங்கப்பட்டது. முதலாம் ஆண்டிலேயே 13 லட்சம் மாணவர்களுக்கு திறன் பயிற்சி அளித்து, தற்போது வரை சுமார் 41 லட்சம் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன. திட்டம் துவங்கப்பட்டதிலிருந்து தற்போது வரை கல்லூரி பேராசிரியர்களுக்கு ஒரு லட்சம் திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது.
கல்லூரி மாணவர்களுக்கான பயிற்சிகள்
இத்திட்டம் பொறியியல், கலை மற்றும் அறிவியல், பாலிடெக்னிக் மற்றும் ITI மாணவர்களுக்கு எவ்வித நிதிச்சுமையும் இன்றி கல்வியாளர்கள், தொழில்நுட்ப நிபுணர்கள், வழிகாட்டிகள் மற்றும் நிர்வாகிகள் மூலம் திறன்களை வளர்க்கும் வகையில் ஒருங்கிணைந்த கல்வி வாய்ப்புகளை வழங்குகிறது. இந்த திட்டம் நகர்ப்புற மாணவர்களின் திறன்களுக்கு இணையாக ஊரகப்பகுதியைச் சேர்ந்த மாணவர்களின் திறன்களை எவ்வித செலவுமின்றி உயர்த்துவதற்கு, Microsoft, IBM, ORACLE, GOOGLE, CISCO, HCL, Infosys, A Ws, Siemens, FANUC, Dassault, L&T போன்ற உலகளாவிய நிறுவனங்களுடன் இணைந்து தொழில்துறை சார்ந்த திறன் பயிற்சிகளை வழங்குகிறது. இந்தப் பயிற்சிகள் Big Data, Internet of Things, Robotics, Artificial Intelligence, Machine Learning, Industry 4.0. Robotics, Building Information Modelling போன்ற துறைகளில் தொழில்நுட்ப நிபுணர்களால் வழங்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு
திறன் வகுப்புகளை மாணவர்கள் எளிதிலும் இலவசமாகவும் பெற ஏற்றவாறு பிரத்யேகமாக இணையதளம் ஒன்று (www.naanmudhalvan.tn.gov.in) இயக்கப்படுகிறது.
கடந்த 3 ஆண்டுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கு விருப்பம் தெரிவித்த 3,28,393 இறுதி ஆண்டு கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாக வேலைவாய்ப்பு முகாம்கள் மற்றும் நான் முதல்வன் மாவட்ட வேலை வாய்ப்பு முகாம்கள் மூலம் பணி நியமனம் பெற்றுள்ளனர்
நான் முதல்வன் நிரல் திருவிழா: இளைஞர்களின் படைப்பாற்றல் மற்றும் புதுமை திறனை வளர்க்கும் நோக்குடன் உருவாக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மூலம் அரசுத் துறைகள் மற்றும் தொழில் நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட நுட்பவியல் சவால்கள் (problem statements) இறுதி ஆண்டுப் பொறியியல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டன. முதலாவது பதிப்பில் 8.486 குழுக்களும், இரண்டாவது பதிப்பில் 15,337 குழுக்களும் பங்கேற்றன. சிறந்த ஆயிரம் படைப்புகளுக்கு பத்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகையாக வழங்கப்படுகிறது.
நான் முதல்வனின் SCOUT திட்டமானது, தமிழகத்தில் மாணவர்களுக்கு உலகளாவிய தொழில்முறை பயிற்சியினை வெளிநாடுகளில் உள்ள முன்னணி நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்களுடன் இணைந்து வழங்கும் திட்டம் ஆகும். Data Science, Al, Bio Technology போன்ற துறைகளில் மாணவர்களை உலகத் தரம் கொண்ட வல்லுநர்களாக மேம்படுத்த இந்தத் திட்டம் உதவுகிறது.
Al மற்றும் Data Science துறையில் பயிற்சி
இத்திட்டத்தின் முதல் படியாக பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் தர்ஹம் பல்கலைக்கழகத்துடன் இணைந்து 100 மாணவர்களுக்கு இணையதளம் மூலமாக
Al மற்றும் Data Science துறையில் பயிற்சி வழங்கப்பட்டது. இவர்களில் சிறந்த 25 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு. அவர்களுக்கு தர்ஹம் பல்கலைக்கழகத்தில் நேரடி பயிற்சி வழங்கப்பட்டது. இப்பயிற்சி பெற்ற 25 மாணவர்களில், 13 மாணவர்கள் முன்னணி நிறுவனங்களான பேங்க் ஆப் நியூயார்க், சிட்டிகார்ப், Zoho, HCL டெக் போன்ற பெருநிறுவனங்களில் பணி நியமனம் பெற்றுள்ளனர். இவர்கள் ஆண்டு வருமானமாக சுமார் 10 லட்சம் முதல் 31 லட்சம் வரை பெறுகின்றனர். இதர 12 மாணவர்கள் உயர்கல்வியை தொடர்கின்றனர்.
வெளிநாட்டு பல்கலைக்கழகத்தில் படிப்பு
இத்திட்டத்தின் கீழ், தமிழ்நாட்டைச் சார்ந்த 10 மாணவிகள் ஜப்பான் நாட்டில் Internship பயிற்சி மேற்கொண்டனர். இவர்களுள், 6 மாணவிகள் நெக்ஸ்ட் ஜென் கார்ப் என்ற நிறுவனத்தில் கணினி துறையில் தொழில் பயிற்சி பெற்று, மாணவிகள் அதே நிறுவனத்தில் முழு நேர பணி நியமனம் பெற்று ஆண்டு வருமானமாக சுமார் 21 லட்சம் பெறுகின்றனர். மேலும், 4 மாணவிகள் ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தில் Bio-Technology சார்ந்த ஆராய்ச்சி பயிற்சி பெற்றனர். இவர்கள் அனைவரும் ஆராய்ச்சி சார்ந்த பயிற்சியினை தொடர இந்தியாவில் உள்ள ஐஐடி ரூர்க்கியில் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த 4 மாணவிகளும் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப் படிப்பு படிப்பதற்கான வாய்ப்பையும் பெற்றுள்ளனர் என்பது மேலும் சிறப்பு.
கூகுள் நிறுவனத்துடன் ஒப்பந்தம்
இதன் தொடர்ச்சியாக 2025 ஆம் ஆண்டில் 6 மாணவர்கள் தென்கொரியா நாட்டில் உள்ள Pusan Universityயிலும் Gachon University Internship பயிற்சியினை நிறைவு செய்தனர். இதில், Gachon University இல் Internship முடித்த 3 மாணவர்களுக்கு உயர்கல்வி பயில Gachon University வாய்ப்பளித்துள்ளது. மேலும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பினை அதிகரிக்கும் வகையில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்காக Google Play மற்றும் Unity Game Developer Training program என்ற புதிய முன்னெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது.
Google Play wibb Unity Game Developer Training Program orbrug Google Play. Unity மற்றும் முன்னணி கேம் துறையினர் இணைந்து வழங்கும் ஒரு சிறப்பு திறன் பயிற்சி ஆகும். இது கேம் டிசைன், டெவலப்மென்ட் மற்றும் மானிட்டைசேஷன் ஆகியவற்றில் உலகத் தரத்திலான தொழில்நுட்ப திறன்களை வழங்குவதைக் குறிக்கோளாகக் கொண்டுள்ளது. குறிப்பாக தமிழ்நாட்டைச் சேர்ந்த கணினி அறிவியல் துறையிலுள்ள (CSE) இறுதியாண்டு இன்ஜினியரிங் மாணவர்களுக்கும் மற்றும் நடப்பாண்டில் உயர்கல்வி முடித்த மாணவர்களுக்கும் இது சிறந்த வாய்ப்பாகும்.
இத்திட்டத்தின் முக்கிய அம்சங்கள்:
இலவச Unity லைசென்ஸ், இலவச பயிற்சி, தேர்வு தயாரிப்பு அமர்வுகள், தொழில் நிபுணர்களுடன் சந்திப்பு மற்றும் உரையாடல் வாய்ப்பு, மற்றும் ஸ்டார்ட்-அப் ஆர்வமுள்ளவர்களுக்கு இன்க்யூபெட்டர் மற்றும் முதலீடுகளுக்கான வாய்ப்பு ஆகியவை அடங்கும். முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்ட 250 மாணவர்களுக்கு இந்த திறன் பயிற்சி வழங்கப்படவுள்ளது. ஒவ்வொரு மாணவருக்கும் தலா 32,000 ரூபாய் (அமெரிக்க டாலர் 378) மதிப்புடைய Unity லைசென்ஸ் மூலம் இந்த பயிற்சி மற்றும் சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. இதன் மொத்த மதிப்பு 80,32,500 ரூபாய் (எண்பது லட்சத்து முப்பத்திரண்டு ஆயிரத்து ஐநூறு ரூபாய்) ஆகும்.
உலகளாவிய gaming இண்டஸ்ட்ரியின் தற்போதைய சந்தை மதிப்பு 200 பில்லியன் டாலர் ஆகும், 2029-க்குள் இந்தியாவின் gaming இண்டஸ்ட்ரியின் சந்தை மதிப்பு 9 பில்லியன் டாலராக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் 29 ஆம் தேதி தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டைச் சேர்ந்த கணினி அறிவியல் துறையிலுள்ள இறுதி ஆண்டு பயிலும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கான கேம் டெவலப்பர், ஆர்டிஸ்ட் மற்றும் புரோகிராமர் திறன் பயிற்சி திட்டத்திற்காக உலகளாவிய நிறுவனமான கூகுள் மற்றும் யுனிட்டி நிறுவனத்தினருக்கும், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்திற்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.