ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்தை சேர்ந்த டி.ராமதாசப்ப நாயுடு (61) மத்திய அரசின் பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் ‘முத்ரா விவசாய திறன் மேம்பாட்டு மல்டி ஸ்டேட் கூட்டுறவு சொசைட்டி’ நிறுவனத்தை கடந்த 2020-ல் தொடங்கினார். இதில் முக்கிய நிர்வாகியாக இவரது மகன் சாய் கிரண் (45) நியமனம் செய்யப்பட்டார்.
தந்தையும், மகனும் இணைந்து இந்த கூட்டுறவு சங்கத்தில் 2000 பேருக்கு மார்க்கெட்டிங் சூப்பர்வைஸர் வேலை வழங்குவதாக ஒரு பத்திரிகையில் விளம்பரம் செய்தனர். இதனை நம்பி ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 1,600 பேர் சேர்ந்தனர். சங்கத்தில் பணம் முதலீடு செய்பவர்களுக்கு அதிக வட்டி வழங்குவோம் என பொதுமக்களிடம் கூறி, ஆட்களை சேர்க்க வேண்டும் என இலக்கும் கொடுத்தனர்.
அதன்படி, 1,300 ஊழியர்களும் விவசாயிகள், நடுத்தர குடும்பத்தினர், தினக்கூலி ஆட்கள் என பல தரப்பட்டவர்களை உறுப்பினர்களாக சேர்த்து ரூ.140 கோடி வரை பணத்தை செலுத்த வைத்தனர்.ஆனால், பணம் மெச்சூரிட்டி ஆகியும் பொதுமக்களுக்கு பணத்தை தராமல் இழுத்தடித்தனர்.
இதனால் கோபம் அடைந்த பணியாளர்களில் சிலர் ஹைதராபாத் உட்பட பல போலீஸ் நிலையங்களில் தந்தை, மகன் மீது புகார் அளித்தனர். மேலும், பாதிக்கப்பட்ட பொதுமக்களும் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து இந்த வழக்குகளில் தெலங்கானா சிஐடி விசாரணை மேற்கொண்டது. இதில் பல தரப்பட்ட சாட்சியங்கள் நிரூபணம் ஆனதால், நேற்று ராமதாசப்பாவையும், அவரது மகன் சாய் கிரணையும் சிஐடி போலீஸார் கைது செய்தனர்.