‘கூலி’ படத்தின் வெளியீட்டுக்கு நெருங்கி வருவதால் படத்தின் இறுதிகட்டப் பணிகளில் இயங்கி வருகிறார் லோகேஷ் கனகராஜ். அப்படி படத்தின் ப்ரோமோஷனுக்காக சில நேர்காணல்களும் அவர் கொடுத்து வருகிறார்.
‘கூலி’ திரைப்படம் பற்றி அவர் பேசிய முக்கியமான சில விஷயங்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் சமீபத்திய பேட்டிகளில் ‘கூலி’ திரைப்படம் தொடர்பாக அவர் பகிர்ந்த முக்கியமான தகவல்களைப் பார்ப்போமா…

-
” ‘கூலி’ படத்தின் அறிவிப்பு காணொளியில் வந்த ‘முடிச்சிடலாமா’ என்கிற வசனம்தான் படத்தின் இன்டர்வெல் காட்சி. இதை நான் சொல்லவில்லையென்றாலும் பார்வையாளருக்கு அது தெரிந்திருக்கும். ‘கூலி’ திரைப்படத்திற்கு முதன்முதலாக, ஒரு அழுத்தமான எமோஷனல் காட்சியைத்தான் படமாக்கினோம். ரஜினி சாரும், சத்யராஜ் சாரும் இருக்கும் காட்சிதான் அது. ‘மிஸ்டர் பாரத்’ படத்திற்குப் பிறகு அவர்கள் இருவரும் இப்படத்தில் சேர்ந்து நடிக்கிறார்கள்.”
-
“ரஜினி சார் எதிர்பார்க்கும் மாஸ் மொமென்ட்ஸ் அதிகமாகவே இருக்கிறது. அதற்கு எந்த குறையும் இருக்காது. நாகர்ஜூனா சார் பேட்டியில் சொன்னதைப் போல “விசில் விசில் விசில்”தான்! ஆனால், இப்படியான ஒரு திரைப்படத்தில் அவரைப் பார்ப்பதுதான் புதிதாக இருக்கும். இந்த ஸ்டைலில் இதற்கு முன் அவர் திரைப்படம் செய்தது கிடையாது. இத்திரைப்படத்தில் சாந்தமான ரஜினி சாரை பார்ப்பீர்கள், அதே சமயம் நம் மாஸ் ரஜினி சாரையும் பார்ப்பீர்கள்.”
-
“எந்த இடத்தில் தொந்தரவு இல்லாமல் படப்பிடிப்பை நடத்த முடியுமோ, அப்படி திட்டமிட்டுதான் படப்பிடிப்பை நடத்தினோம். அதனால்தான் பாங்காக் பகுதிக்குச் சென்று படப்பிடிப்பை நடத்தினோம். அதுபோலதான், வைசாக் சென்று துறைமுக படப்பிடிப்புகளை நடத்தினோம். பெரிதளவு துறைமுகங்களைக் காட்சிகளில் காட்டும்போது அதற்கென தனியாக செட் அமைக்க முடியாது. அதனால் உண்மையான பகுதிகளுக்குச் சென்றுதான் படப்பிடிப்பை நடத்த வேண்டியிருந்தது. படத்தில் கிரீன் மேட் காட்சிகளும் கூட அதிகமாக இருக்காது. அதிகபட்சமாகவே இரண்டு நிமிடங்களுக்குதான் கிரீன் மேட் காட்சிகள் இருக்கும். படத்தில் கிராபிக்ஸ் காட்சிகளும் மிகக் குறைவுதான்.”

-
“‘கூலி’ படத்திற்காக தினமும் 700 முதல் 1000 பேர் படத்தில் பணியாற்றினார்கள். துறைமுகம், அங்கு இருக்கும் தொழிலாளர்கள் என படத்தின் கதையும் விரிவதால் அதை காட்சிப்படுத்துவதற்கு இத்தனை நபர்கள் தேவைப்பட்டார்கள். அதுபோல, இப்படத்திற்காக ரஜினி சார் 45 நாட்கள் இரவு நேரப் படப்பிடிப்புகளில் பங்கேற்றார். கிட்டத்தட்ட 45 நாட்கள் இரவு 2 மணி வரை படப்பிடிப்பு தளத்தில் இருப்பார்.”
-
“உபேந்திரா சார், ரஜினி சாரை முதல் முறையாக சந்திக்கும்போது கண்கலங்கிவிட்டார். செளபின் சாஹிர் நடித்திருக்கும் கதாபாத்திரம் முதலில் ஃபகத் பாசிலுக்காக எழுதியிருந்தேன். கால் ஷீட் பிரச்னைகளால் அவரால் நடிக்கமுடியவில்லை. சொல்லப்போனால், இந்தக் கதாபாத்திரத்தை உருவாக்க ஆறு மாதங்களுக்கு மேல் செலவிட்டேன்.”
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…