இங்கிலாந்து vs இந்தியா நடப்பு டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளில் இங்கிலாந்தும், ஒரு போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றிருக்கிறது. ஒரு போட்டி டிரா ஆகியிருக்கிறது.
இங்கிலாந்து அணி 2 – 1 எனத் தொடரில் முன்னிலை வகிக்கும் நிலையில், இத்தொடரை இங்கிலாந்து கைப்பற்றுமா அல்லது இந்தியா சமன் செய்யுமா என்பதைத் தீர்மானிக்கும் போட்டியாக ஓவல் டெஸ்ட் அமைந்தது.

இப்போட்டியை டிரா செய்தாலே தொடரை இங்கிலாந்து கைப்பற்றும் எனும் சூழலில் காயம் காரணமாக கடைசி போட்டியிலிருந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் விலகினார். அவருக்குப் பதில், ஒல்லி போப் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
மேலும், கடந்த போட்டியில் ஆடிய லியாம் டாசன், பிரைடன் கார்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டங் ஆகியோர் பிளெயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர்.
இவ்வாறான சூழலில், ஓவல் மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணியளவில் கடைசி போட்டி தொடங்கியது.
டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஒல்லி போப் பந்துவீச்சைத் தேர்வுசெய்தார்.
அதைத்தொடர்ந்து பேசிய ஒல்லி போப், “கொஞ்சம் மேகமூட்டமாக இருக்கிறது. கேப்டன் இல்லை, அதேசமயம் சில புதுமுகங்கள் எங்களிடம் இருக்கின்றனர்.
நல்ல பேட்டிங் இருக்கிறது. கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன் நல்ல ரன்கள் வைத்திருக்கிறார்கள்.
2 – 2 என ஆடப்போவதில்லை. நாங்கள் வெற்றிபெற ஆடப்போகிறோம்.” என்று தெரிவித்தார்.

அவரைத்தொடர்ந்து இந்திய கேப்டன் சுப்மன் கில், “போட்டியில் வெற்றி பெறும் வரை டாஸை இழந்தாலும் கவலையில்லை.
என்ன செய்வது என்பதில் நேற்று கொஞ்சம் குழப்பமாக இருந்தது.
வானம் மேகமூட்டமாக இருக்கிறது. அதேசமயம் பிட்ச் நன்றாக இருக்கிறது.
முதல் இன்னிங்ஸில் நல்ல ரன்களை எடுக்க நாங்கள் முயற்சிப்போம். பந்து வீச்சாளர்களுக்கு நல்ல பிட்சாக இருக்கும்.

பண்ட், ஷர்துல், பும்ராவுக்குப் பதில் துருவ் ஜோரல், பிரசித்தி கிருஷ்ணா ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.
நாங்கள் விளையாடும் ஒவ்வொரு ஆட்டத்திலும் வெற்றியை எதிர்பார்க்கிறோம்.
அதற்கான அனைத்தையும் எங்கள் வீரர்கள் செய்வார்கள்” என்று கூறினார். (அணியில் இன்னொரு மாற்றமாக அன்ஷுல் கம்போஜுக்குப் பதில் ஆகாஷ் தீப் மீண்டும் அணிக்குள் வந்திருக்கிறார்).
இங்கிலாந்து பிளெயிங் லெவன்:
ஜாக் க்ராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேக்கப் பெத்தல், ஜேமி ஸ்மித், கிறிஸ் வோக்ஸ், கஸ் அட்கின்சன், ஜேமி ஓவர்டன், ஜோஷ் டங்
இந்தியா பிளெயிங் லெவன்:
ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்சன், சுப்மன் கில், கருண் நாயர், ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜோரல், வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா, சிராஜ்